International Surf Open 2023: மாமல்லபுரத்தில் நாளை முதல் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  International Surf Open 2023: மாமல்லபுரத்தில் நாளை முதல் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி

International Surf Open 2023: மாமல்லபுரத்தில் நாளை முதல் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி

Manigandan K T HT Tamil
Aug 13, 2023 10:27 PM IST

2023 ஆகஸ்ட் 14 முதல் 20 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச அலைச்சறுக்குபோட்டி 2023 –தொடக்கவிழாமாண்புமிகுஇளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (13.8.2023) சர்ப் டர்ஃப் கோவளம் கடற்கரையில் நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்ஃபிங் பலகையை வீராங்கனைக்கு வழங்கியபோது எடுக்கப்பட்ட படம்
தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்ஃபிங் பலகையை வீராங்கனைக்கு வழங்கியபோது எடுக்கப்பட்ட படம்

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேஷன் (TNSA), இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் (SFI) இணைந்து, இந்தியாவில் முதன் முறையாக, சர்வதேச சர்ப் ஓப்பன் – தமிழ்நாடு (International Surf Open – Tamil Nadu ) நடைபெறுகிறது. இந்த பெருமைக்குரிய நிகழ்வானது வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் 2023 ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சர்வதேச அலைச்சறுக்கு போட்டி (WSL – INTERNATIONAL SURF OPEN – TAMILNADU) தொடக்க விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்ததாவது:

சர்வதேச அலைசறுக்கு லீக் QS 3000 போட்டி 2023 மாமல்லபுரத்தில் நடைபெறுகின்ற இந்த சிறப்பான தருணத்தில், நாம் அனைவரும் ஒன்றாக கூடியுள்ளோம்.

2023 ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பை போட்டியினை சென்னையில் வெற்றிகரமாக நடத்தியுள்ள நிலையில், உடனடியாக இந்த போட்டியினை சிறப்பாக நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹாக்கி போட்டி முடிவுற்ற மறுதினமே இந்த சர்ஃபிங் போட்டியினை நடத்துவது, தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறைக்கு அளிக்கும் முக்கியத்துவம் மற்றும் சிறப்புமாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஈடுபாடின்றி இதுபோன்ற விளையாட்டு போட்டிகளை நடத்துவது இயலாது. அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் முதல்முறையாக QS 3000 சர்ஃப் லீக் போட்டி தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நாளை (14.8.2023) முதல் 20.8.2023 வரை நடைபெறுவதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முழுமனதுடன் இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.2.68 கோடி நிதியினை ஒதுக்கியுள்ளார்கள். இந்த சிறப்புமிக்க தொடரில் 12 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச அளவிலான 39 வீரர்கள், 14 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் பங்கேற்கின்ற 15 இந்திய வீரர்களில் 12 வீரர்கள் தமிழ்நாட்டினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிகளில் பெறுகின்ற புள்ளிகள் அடுத்து வருகின்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் தகுதி பெற ஏதுவாக அமையும். இந்த தொடர் தமிழ்நாடு விளையாட்டுத் துறையின் வரலாற்றில் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும். தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் 2023 – 24 பட்ஜெட்டில் இராமநாதபுரத்தில் தமிழ்நாடு நீர் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்கவும், அவர்களுக்கு தேவையான நிதி மற்றும் அனைத்து வசதிகளை மேம்படுத்தவும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையின் மீது தமிழ்நாடு அரசிற்குள்ள அர்ப்பணிப்பினை வெளிகாட்டும் விதமாக முதலமைச்சர் கோப்பை 2023 போட்டி நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இந்த உலக சர்ஃபிங் போட்டியை தொடர்ந்து அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் ஹெச்.சி.எல் நிறுவனத்துடன் இணைந்து சைக்ளோத்தான் போட்டி சென்னையில் நடத்தப்பட உள்ளது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போட்டிகள் ஜனவரி 2024-ல் நடத்தப்பட உள்ளன. விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முன்முயற்சிகளுக்கு, விளையாட்டுத் துறையில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய அளவில் நடைபெற்ற சர்ஃபிங் போட்டிகளில் 16 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற கமலிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்ஃபிங் பலகையை வழங்கினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.