Indonesia open 2024: காலிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென்! இரட்டையர் பிரிவில் மூன்று தோல்விகளை சந்தித்த இந்தியா
ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் ஜப்பான் வீரரை வீழ்த்திய இந்திய நட்சத்திர வீரர் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.தற்போது இவர் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இரட்டையர் பிரிவில் மூன்று தோல்விகளை இந்திய ஜோடி சந்தித்துள்ளது.
இந்தோனேஷியா ஓபன் 2024 பேட்மிண்டன் தொடர் இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது. ஜூன் 4ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் ஜூன் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 1982 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த பேட்மிண்டன் தொடர் 2007ஆம் ஆண்டில் பிடபிள்யூஎஃப் அந்தஸ்து பெற்றது.
காலிறுதியில் லக்ஷயா சென்
முதல் சுற்றில் வெற்றி பெற்ற லக்ஷயா சென், இரண்டாவது சுற்றில் ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோ என்பவரை எதிர்கொண்டார். இந்த போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய லக்ஷயா சென் எளிதான வெற்றியை பெற்றார். 21-9, 21-15 என்ற கணக்கில் இரண்டு சுற்றுகளையும் தன்வசமாக்கினார்.
இந்த வெற்றியால காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இதையடுத்து டென்மார்க் நாட்டை சேர்ந்த ஆண்டர்ஸ் ஆண்டன்சன் என்பவரை காலிறுதியில் எதிர்கொள்ள இருக்கிறார் லக்ஷயா சென்
இரட்டையர் பிரிவில் தோல்வி
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஆகியோர், ஜப்பான் நாட்டை சேர்ந்த மாயு மாட்சுமோட்டோ மற்றும் வகானா நாகஹாரா ஜோடியை எதிர்கொண்டனர். பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 21-19, 19-21, 19-21 என்ற கணக்கில் இந்திய ஜோடி தோல்வியை தழுவியது.
இதேபோல் கலவை இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி, சீனாவின் டாப் சீட் ஜோடியான சிவே ஜெங் மற்றும் யாகியோங் ஹுவாங் ஆகியோருக்கு எதிராக தோல்வியை தழுவினார்கள்.
இந்த போட்டியில் 9-21, 11-21 என்ற நேர் செட்களிலும், எவ்வித ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தாமல் வெற்றியை பறிகொடுத்தனர்.
இதற்கு அடுத்தபடியாக மற்றொரு இரட்டையர் ஜோடியான தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் 13-21, 21-19, 13-21 என்ற புள்ளிக் கணக்கில் தென் கொரியாவின் ஹா நா பேக் மற்றும் சோ-ஹீ லீ ஆகியோருக்கு எதிராக தோல்வியுற்றனர்.
இரட்டையர் பிரிவு போட்டிகளில் மூன்று ஆட்டங்களில் இந்திய தோல்வியடைந்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.
இருப்பினும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பிரியான்ஷு ராஜாவட், தாய்லாந்து நாட்டின் குன்லவுட் விடிசார்ன் என்பவரை எதிர்கொள்கிறார். இதில் இந்திய வீரர் வெற்றி பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
அத்துடன் தற்போதைய நிலையில் நட்சத்திர வீரர் லக்ஷயா சென் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அவரது ஆட்டத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் சுற்றிலேயே வெளியேறிய பிவி சிந்து
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நட்சத்திர வீராங்கனையான பிவி சிந்து, சீனா தைப்பே வீராங்கனையான சுவென்-ஷீ என்பவருக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
இந்த போட்டியில் பிவி சிந்து போராட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும், வெற்றிக்கணியை எட்டமுடியாமல் போனது. 15-21, 21-15, 14-21 என்ற புள்ளிக்கணக்கில் இந்தோனேஷியா ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்