Indian Players: மிக இளம் வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான 10 வீரர்கள்
Indian Cricket Team: நல்ல அனுபவம் வாய்ந்த வீரர்களே திணரும் நிலையில், மிக குறைந்த வயதில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி சாதனை படைத்த வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
கிரிக்கெட் என்றால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து எப்படியோ அப்படி இந்தியாவும் ஜாம்பவான் அணிதான்.
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் 11 பேர் கொண்ட கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து விளையாடுவது என்பது சாதாரண விஷயமல்ல.
அப்படி வாய்ப்பு கிடைக்கப் பெற்றாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வது என்பது மற்றொரு சவால்.
நல்ல அனுபவம் வாய்ந்த வீரர்களே திணரும் நிலையில், மிக குறைந்த வயதில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி சாதனை படைத்த வீரர்களின் பட்டியலைப் பார்ப்போம் வாருங்கள்.
சச்சின் டெண்டுல்கர்
விஜய் மெஹ்ரா 17 வயதிலேயே இந்திய அணிக்காக டெஸ்டில் அறிமுகமானார். அவர் காலத்திற்கு பிறகு, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார்.
கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத வீரராக சச்சின் திகழ்ந்து வருகிறார். அவர் செய்யாத சாதனைகளே இல்லை. இத்தனை சாதனைகளை தனது கெரியரில் படைப்பதற்கு அவர் இளம் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்ததும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
1989ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்த்திவ் பட்டேல்
பார்த்திவ் படேலை அனைவருக்கும் நினைவிருக்கலாம். இளம் புயலாக இருந்தபோதே இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக களம் இறங்கினார்.
அவர் இந்திய அணியில் இடம்பிடித்தது 2002ஆம் ஆண்டில் தான். இங்கிலாந்துக்கு எதிராக அவர் களமிறங்கினார்.
குஜராத் மாநிலம், பாவ்நகரில் 1985ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பிறந்த பார்த்திவ் படேல், 9 வயதாக இருக்கும்போது இடது கையில் சுண்டு விரலை இழந்தார்.
ஆனால், அவரது விடாமுயற்சியும் பயிற்சியும் அவரை இந்திய அணியில் இடம்பிடிக்கச் செய்தது.
ஹர்பஜன் சிங்
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இவரை யாரால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியும். வித்தியாசமாக ஓடிவந்து கைகளை சுழட்டி பந்துவீசும் இவரது ஆற்றல் தனித்துவத்துடன் இருக்கும்.
1998ஆம் ஆண்டு 17 வயதில் இந்திய அணியில் இடம்பிடித்தார் ஹர்பஜன் சிங்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மார்ச் 25, 1998ஆம் ஆண்டு இடம்பிடித்தார் ஹர்பஜன்.
மணிந்தர் சிங்
மணிந்தர் சிங் என்ற வீரரை இன்றைய தலைமுறையினருக்கு பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் 1982ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
அப்போது அவருக்கு வயது 17. ஆனால், தனது முதல் ஆட்டத்தில் மணிந்தர் சிங் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை.
வாஷிங்டன் சுந்தர்
சென்னையில் பிறந்த வாஷிங்டன் சுந்தர், 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் அறிமுகமானார். அவருக்கு அப்போது 18 வயது.
பிருத்வி ஷா
பிருத்வி ஷா 18 வயதில் இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட்டில் அறிமுகமானார். முதல் ஆட்டத்திலேயே சதம் விளாசினார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2018ஆம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.
யு-19 உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வெற்றுத் தந்தார் பிருத்வி ஷா என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்ட்
2021 ஜனவரி மாதத்தில் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றவர் ரிஷப் பண்ட். இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் 19 வயதில் அறிமுகமானார். இங்கிலாந்துக்கு எதிராக 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி அவர் களமிறங்கினார்.
டி20 உலகக் கோப்பையில் மிக குறைந்த வயது விக்கெட் கீப்பராகவும் இவர் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஷாந்த் சர்மா
வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆண்டு 2008. 140 கி.மீ. வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்டவர் இஷாந்த். இவரது வேகம் எதிரணி வீரர்களை தடுமாறச் செய்தது.
ராகுல் சஹர்
ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரைச் சேர்ந்த ராகுல் சஹர், 2019ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 20. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் ராகுல் சஹர் விளையாடினார்.
சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் துடிப்புடன் விளையாடியவர். இவரது ஃபீல்டிங்கும், பேட்டிங்கும் அபாரமாக இருக்கும்.
ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது சக வீரர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். இவர் 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்காக ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
ஜூலை 30, 2005இல் இந்திய அணியில் அறிமுகமாகியபோது, சுரேஷ் ரெய்னாவுக்கு வயது 20.
டாபிக்ஸ்