Shikhar Dhawan: மனைவிக்கு எதிராக ஷிகர் தவான் வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவான் நற்பெயரை களங்கப்படுத்துவேன் எனக் கூறி ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் சிஇஓக்கு, தவானை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் அவரது மனைவி குறுஞ்செய்தி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் டெல்லி நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஷிகர் தவான் டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், "தன்னை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் தன் மனைவி ஆஷா முகர்ஜி, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பேன் என மிரட்டி வருகிறார். தன்னை பற்றி அவதூறான செய்திகளை டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணி சிஇஓ தீரஜ் மல்கோத்ரவுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதன்மூலம் அவரிடம் தன்னை பற்றி தவறான பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளார்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை நீதிபதி ஹரீஷ் குமார் விசாரித்த நிலையில், ஷிகர் தவான் மீது சமூக வலைதளங்களில் அவதூறான பதிவுகளை பகிர்வதற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டார்.
தவானுக்கு எதிரான தனது குறைகள், வேறு சர்ச்சைகள் அல்லது அவருக்கு எதிராக\ கூறப்படும் அவதூறு மற்றும் பொய்யான தகவல்களை சமூக ஊடகங்கள், அல்லது வேறு எந்த ஊடகங்களில் பரப்புவதற்கு மறு உத்தரவு வரும் வரை அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தவான் மீது ஏதேனும் உண்மையான குற்றச்சாட்டுகள் இருந்தால் அதை தொடர்புடைய அலுவலரிடம் ஆஷா முகர்ஜி தாக்கல் செய்வதை தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
தன்னைவிட 12 வயது மூத்தவரான ஆஷா முகர்ஜிக்கும், ஷிகர் தவானுக்கும் கடந்த 2012இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது தவானின் மகன் அவரது தாயார் ஆஷா முகர்ஜியுடன் ஆஸ்திரேலியாவில் இருந்து வருகிறார்.
டாபிக்ஸ்