Intercontinental Cup 2023 Football: இன்டர்காண்டினென்டல் கால்பந்து தொடர்.. சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!
India vs Lebanon: இன்டர்காண்டினென்டல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லெபனான் அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த இன்டர்காண்டினென்டல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லெபனான் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்டர்காண்டினென்டல் கோப்பைக்கான கால்பந்து தொடரின் 3-வது சீசன் நடந்தது. இதில், இந்தியா, மங்கோலியா, லெபனான், வனுவாட்டு ஆகிய 4 அணிகள் கலந்துகொண்டன. லீக் சுற்றின் முடிவில் இந்தியா, லெபனான் அணிகள் பைனலுக்கு முன்னேறின. கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் நேற்று இரவு நடந்தது. இதில், இந்தியா-லெபனான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லீக் சுற்றில் இரு அணிகளும் மோதிய ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்திருந்ததால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரமாக விளையாடினர். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்ற இந்தியா அணி 46-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து கணக்கை துவங்கியது. இந்த கோலை இந்திய அணியின் கேப்டன் சுனில் செத்ரி அடித்தார். இதனைத் தொடர்ந்து லாலி யன்ஜீவாலா 66-வது நிமிடத்தில் அடுத்த கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை லெபனான் வீரர்கள் கோல் அடிக்க போராடினார்கள். ஆனால், அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால், ஆட்டநேர முடிவில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இன்டர்காண்டினென்டல் கால்பந்து தொடரில் 2-வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2018-ல் நடந்த முதல் சீசனில் கென்யாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்