HBD Anju Jain: முறியடிக்கப்படாத இவரது 18 ஆண்டு கால சாதனை! இந்திய மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்டர்
இந்திய மகளிர் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்டராக ஜொலித்தவரும், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிக ஸ்டம்பிங் செய்தவர் என்ற பெருமைக்கும் உரியவராக இருப்பவர் அஞ்சு ஜெயின்.
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் புரிந்த முன்னாள் வீராங்கனை பலரும் தற்போதும் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டில் ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் 2000ஆவது ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட இவர், அரையிறுதி போட்டி வரை அழைத்து சென்றார்.
இந்திய அணிக்காக 1993 முதல் 2005 வரை கிரிக்கெட் விளையாடிய இவர், விக்கெட் கீப்பராகவும், வலது கை டாப் ஆர்டர் பேட்டராகவும் இருந்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் டெல்லி மற்றும் ஏர் இந்தியா அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
65 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் அஞ்சு ஜெயின் 12 அரைசதங்களுடன் 1,729 ரன்கள் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பிங்கிலும் 30 கேட்ச்கள், 51 ஸ்டம்பிங் செய்துள்ளார். இந்த மகளிர் அணி விக்கெட் கீப்பர்களில் மட்டுமல்ல உலக அளவில் மகளிர் ஒரு நாள் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனை அஞ்சு ஜெயின் வசமே உள்ளது.
8 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியிருக்கும் இவர், ஒரு சதம், மூன்று அரைசதம் என 441 ரன்கள் அடித்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் உள்ளூர் அணிகளான ஒடிசா, திரிபுரா, அசாம், விதர்பா, பரோடா மகளிர் கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
2011 முதல் 2013 காலகட்டத்தில் இந்திய மகளிர் அணி பயிற்சியாளராகவும், 2018 முதல் 2020 வரை வங்கதேசம் அணி தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளில் அர்ஜுனா விருது பெற்றவராக இருந்து வருகிறார் அஞ்சு ஜெயின். 2005ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் அவர் இந்த விருதை பெற்றார்.
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பங் செய்து, ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய மூன்றாவது வீராங்கனை என பெருமையை இவர் பெற்றுள்ளார். அத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டிலும் பல்வேறு சாதனைகளை புரிந்த வீராங்கனையாக இருந்துள்ளார்.
ஓய்வுக்கு பின்னர் கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பை ஆற்றி வரும் வீராங்கனைகளில் ஒருவராக இருந்து வரும் அஞ்சு ஜெயின் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்