Ind vs WI: 4 ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணம்! டெஸ்ட், ஒரு நாள், டி20இல் விளையாடும் இந்தியா - முழு அட்டவணை
லண்டனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிவுற்ற நிலையில் அடுத்ததாக டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளும் விளையாட வெஸ்ட்இண்டீஸ் செல்கிறது இந்திய அணி. அங்கு 2 டெஸ்ட், 2 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 சுழற்சி முடிவுக்கு வந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி சாம்பியன் ஆகியுள்ளது. இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ரன்னர்அப் ஆகியுள்ளது. 10 ஆண்டுகளாக இந்தியாவின் ஐசிசி கோப்பைக்கான கனவு, நிறைவேறாமலேயே இருந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான தொடக்க போட்டியில் இந்திய அணி வெஸ்ட்இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. அந்நிய மண் டெஸ்ட் தொடராக இது அமைகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 என அனைத்து வகை கிரிக்கெட்டிலும் பங்கேற்கிறது.
இதில் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் 2023-25க்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம்பிடிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12 முதல் 16 வரை டோமினிகாவில் உள்ள விண்ட்ஸ்சர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 20 முதல் ஜூலை 24 வரை டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டி இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 100வது போட்டியாக அமையவுள்ளது.
டெஸ்ட் போட்டியை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டி ஜூலை 27ஆம் தேதி, இரண்டாவது போட்டி ஜூலை 29ஆம் தேதி பார்போடாஸ் கென்னிங்டன் ஓவல் மைதானத்திலும், மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதி டிரினிடாடில் உள்ள பிரெய்ன் லாரா கிரிக்கெட் அகாடமியிலும் நடைபெறுகிறது.
இதற்கு அடுத்தபடியாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகஸ்ட் 3 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் கயானா தேசிய மைதானம், பிரெய்ன் லாரா கிரிக்கெட் அகாடமி, அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள லாண்டர்ஹில் ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட்இண்டீஸ் சென்று விளையாட உள்ளது ரோஹித் படை.
இந்த ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த இரண்டு தொடர்களுக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்கும் மிகப் பெரிய தொடராக வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணம் அமைகிறது.
கடைசியாக இந்திய அணி 2019ஆம் வெஸ்ட்இண்டீஸ் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதேபோல் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என்ற கணக்கிலும், டி20 தொடரில் 3-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது.
கடந்த முறை வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், ஒரு நாள், டி20 தொடர்களிலும் இந்தியா அணி முழுமையாக வெற்றி பெற்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்