Srinivasa Venkataraghavan: இந்திய அணியில் ஹர்பஜன், அஸ்வினுக்கு முன்னோடி! சுழலில் ஜாலம் செய்த மூத்த பெளலர் வெங்கட்ராகவன்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முக்கிய ஸ்பின் பெளலராகவும் இருந்தவர் சீனிவாச வெங்கட்ராகவன். பின்னாளில் இவர் அம்பயராகவும் பல போட்டிகளில் பங்கேற்று சிறந்த அம்பயர்களில் ஒருவராக இருந்துள்ளார்.
90ஸ் கிட்களுக்கு மிகவும் பிரபலமான நபராக அறியப்படுபவர் சீனிவாச வெங்கட்ராகவன். இவரை பல போட்டிகளில் நடுவராக பார்த்துள்ளோம். இந்தியாவை சேர்ந்த நடுவர்களில் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கள நடுவராக இவர் இருந்துள்ளார்.
ஆனால் இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் என்பதும், ஜாம்பவான் வீரராக இருந்திருப்பதும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சென்னையை சேர்ந்த சீனிவாச வெங்கட்ராகவன் ஒரு கிண்டி பொறியியல் கல்லூரில் ஒரு எஞ்சிஜினயர் கிராஜுவேட். பின்னாளில் 1970களில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த பகவத் சந்திரசேகர், பிஷன் சிங் பேடி, எரபள்ளி பிரசன்னா உள்பட நால்வர் சுழல் கூட்டணியில் ஒருவராக திகழ்ந்தார்.
வெறும் பெளலராக மட்டுமில்லாமல் டெயில் எண்டராக கணிசமான ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேனாகவும் இருந்துள்ளார். தனது 20வது வயதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார் வெங்கட்ராகவன். இவரது முதல் தொடர் நியூசிலாந்துக்கு எதிராக அமைந்த நிலையில், அந்த தொடரிலேயே உலகத் தரம் வாய்ந்த பெளலராக தன்னை நிருபித்தார்.
டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார். இதன் பின்னர் வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரே அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முக்கிய வீரராக உருவெடுத்தார்.
முதல் உலகக் கோப்பை தொடரான 1975 மற்றும் அதற்கு அடுத்தபடியாக நடைபெற்ற 1979 தொடரில் இந்திய அணியை வழிநடத்தியது வெங்கட்ராகவன்தான். 1965இல் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய வெங்கட்ராகவன், 1983இல் முடித்து கொண்டார். அதன் பின்னர் 10 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு பங்களிப்புகளை அளித்து வந்த வெங்கட்ராகவன், 1993இல் கிரிக்கெட் அம்பயராக தனது பயணத்தை தொடர்ந்தார். எலைட் அம்பயர் லிஸ்டில் ஒருவராக இருந்து வந்த வெங்கட் ராகவன் 1996, 1999, 2003 ஆகி உலகக் கோப்பை தொடர்களில் அம்பயராக இருந்தார். புகழ்பெற்ற ஆஷஷ் தொடரிலும் இவர் அம்பயராக செயல்பட்டுள்ளார்.
2004இல் அம்பயரிங்கில் இருந்து ஓய்வு பெற்ற வெங்கட்ராகவன் இன்று தனது 77வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது 2003இல் இவருக்கு வழங்கப்பட்டது.
இந்திய அணியில் சிறந்த ஆஃப் ஸ்பின்னர்களாக அறியப்படும் ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் வெங்கட்ராகவன்.
டாபிக்ஸ்