HT Sports Special: வித்தியாச பவுலிங் ஸ்டைல், பெஸ்ட் ஸ்விங்கர் - ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் எடுத்த இந்திய Pacer
இந்திய கிரிக்கெட்டில் பேட்டிங் காம்போ இருப்பது போல் சில பவுலிங் காம்பினேஷகளும் இருந்துள்ளது. அந்த வகையில் இந்திய அணியில் முகமது அசாருதீன் கேப்டன்சியில் 1997 முதல் 2001 வரை ஐந்து ஆண்டுகள் மட்டுமே விளையாடி வேகப்பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரராக தேபாஷிஷ் மொகந்தி இருந்துள்ளார்.
Unorthodox என சொல்லப்படும் வழக்கத்துக்கு மாறான வித்தியாசமான ஸ்டைலில் பந்து வீசி கவனத்தை ஈர்த்தவர் மொகந்தி. ஒடிசாவில் இருந்து இந்தியாவுக்கு விளையாடிய வீரர்களில் முக்கியமானவராக இருந்த இவர் 1997ஆம் ஆண்டில்இலங்கைக்கு எதிரான தொடரில் அறிமுகமானார்.
இலங்கைக்கு எதிராக டெஸ்ட், ஒரு நாள் என இரண்டு வகை போட்டிகளிலும் விளையாடிய மொகந்தி, அவுட் ஸ்விங் பவுலிங்கில் சிறப்பாக பந்து வீசி கவனத்தை ஈர்த்தார். ஆறு அடி உயரமான பவுலராக இருந்த இவர் இந்திய மைதானங்களில் கூட இடுப்பு அளவில் இயல்பாக பவுன்சர் வீசுபவராக இருந்துள்ளார்.
ஆரம்ப காலகட்டத்தில் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோருடன் இணைந்து புதிய பந்தில் பந்து வீசக்கூடிய பவுலராக இருந்து வந்துள்ளார். முதல் 15 ஓவர்களை வீசக்கூடிய இவர் பின்னர் கடைசி கட்ட ஓவர்களை வீசுபவராக இருந்துள்ளார். ஒரு பக்கம் ரன்களை வாரி வழங்கினாலும், அற்புத ஸ்விங் மூலம் பேட்ஸ்மேன்களை திணறடிக்கவும் செய்தார். இதன் விளைவாக 1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் சர்ப்ரைசாக கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டார்.
உலக கோப்பை தொடரிலும் லீக் போட்டிகள், சூப்பர் சிக்ஸ் போட்டிகளில் விளையாடிய மொகந்தி 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய பவுலர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பவுலர் என்ற பெருமையை பெற்றார்.
இவர் அணியில் இருந்த காலகட்டத்தில் இந்திய அணி இளம் பவுலராக அஜித் அகர்கர் அணியில் சேர்க்கப்பட்டார். மொகந்தி போல் வேகத்திலும், ஸ்விங், ரிவிர்ஸ் ஸ்விங் என சிறப்பாக செயல்பட்ட அகர்கர், மொகந்தியின் இடத்தை மெல்ல நிரப்பினார்.
உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டபோதிலும், அதன் பின்னர் சுழற்சி முறையில் இவரும், அகர்கரும் மாறி மாறி அணியில் இடத்தை பிடித்தனர். இதில், மொகந்தியை விட பேட்டிங்கிலும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட கூடிய வீரராக இருந்தார் அகர்கர். இதனால் மொகந்தி அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.
சர்வதேச அளிவில் 2 டெஸ்ட், 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மொகந்தி 61 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய பவுலர்களில் தனித்துவமான சாதனைக்கும் சொந்தக்காரராக உள்ளார்.
முதல் தர கிரிக்கெட்டில் 10 விக்கெட் எடுத்துள்ள இந்திய பவுலர்களில் ஒருவராகவும், வேகபந்து வீச்சாளராகவும் இருந்து வருகிறார். இவரது சிறந்த பவுலிங் மேற்கு மண்டல அணிக்கு எதிராக 46 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதாகும். அத்துடன் மிகவும் சிக்கனமான பவுலரான இவரது எகானமி 2.38 என உள்ளூர் கிரிக்கெட்டில் உள்ளது.
அதேபோல் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மொகந்தி அதிலும் ரன்கள் அதிகம் விட்டுக்கொடுக்காத பவுலராக இருந்துள்ளார். ஒடிசா ராஞ்சி அணியின் பயிற்சியாளராக இருந்துள்ள மொகந்தி, கிழக்கு மண்டல அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது அந்த அணி வரலாற்றில் முதல் முறையாக துலீப் கோப்பையை வென்றது.
இந்திய கிரிக்கெட்டில் 5 ஆண்டுகள் மட்டும் விளையாடினாலும், வித்தியசமான பவுலிங்கால் பேட்ஸ்மேன்களை திணறடித்த ஸ்விங் மாஸ்டராக இருந்த தேபாஷிஷ் மொகந்தி இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்