HBD John Wright: இந்தியாவின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளர்! சேவாக் காலரை பிடித்து Freezerஇல் தள்ளி விட்ட கோபக்காரன்
நியூசிலாந்து அணியில் முதல் முறையாக 5 ஆயிரம் ரன்களை கடந்த டெஸ்ட் பேட்ஸ்மேன், இந்திய அணியின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளர் உள்பட பல்வேறு முதல் சாதனைகளுக்கு சொந்தக்காராக இருந்து வருபவர் ஜான் ரைட்.
நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஐாம்பவான் வீரராக இருந்து வந்த ஜான் ரைட், அந்த அணியின் முன்னாள் கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்துள்ளார். இடது கை பேட்ஸ்மேனான ஜான் ரைட் 1978இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 1980களில் கத்துக்குட்டி அணியாக இருந்து நியூசிலாந்தை பார்த்து மற்ற அணிகள் அச்சத்தை ஏற்படுத்தியதில் ஜான் ரைட்டின் அசுரத்தனமான பேட்டிங் முக்கிய பங்காற்றியது.
எந்த பவுலராக இருந்தாலும் அசராமல் அடித்து விளையாடும் வல்லமை படைத்த ஜான் ரைட் நியூசிலாந்து அணிக்காக முதல் முறையாக 4 ஆயிரம், 5 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். மொத்தம் 82
டெஸ்ட் போட்டிகளில் 5,334 ரன்கள் எடுத்திருக்கும் ரைட் 12 சதங்களும், 23 அரைசதங்களும் அடித்துள்ளார்.
இதேபாணியில்தான் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய பேட்ஸ்மேனாக இருந்த ரைட், 149 போட்டிகளில் 3891 ரன்கள் அடித்துள்ளார். சர்வதேச போட்டிகளை விட முதல் தர போட்டிகள் மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆச்சர்யப்படும் விதமாக சாதனைகளை புரிந்துள்ளார் ஜான் ரைட்.
366 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர் 25, 073 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 59 சதங்களும், 126 அரைசதங்களும் அடித்துள்ளார். அ்தேபோல் 349 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 10,240 ரன்கள் குவித்துள்ளார்.
ஒபனிங் பேட்ஸ்மேனான ஜான் ரைட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே பந்தில் 8 ரன்கள் அடித்த வீரராக என்ற அரிதான சாதனையும் நிகழ்த்தியுள்ளார். 1980இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டில் அடித்து நான்கு ரன்கள் ஓடியே எடுத்த அவர், பின்னர் ஓவர் த்ரோ மூலம் பவுண்டரி கிடைக்க அது அவரது கணக்கில் எட்டு ரன்களாக மாறியது.
1993இல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஜான் ரைட். இதையடுத்து இவரை தேடிப்பிடித்து இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுமாறு கோரிக்கை வைத்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி. கங்குலியின் கேப்டன்சிக்கு பிறகு இந்திய அணி புதிய உயரங்களை எட்டியது என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிவர். நாடு முழுவதும் உள்ள திறமையான இளம் வீரர்கள் கண்டெடுத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதோடு, அவர்களை வைத்த உள்ளூர், அந்நிய மண்ணில் தொடர் வெற்றிகளை குவித்தார் கங்குலி. இதற்கு பக்க பலமாக அவருடன் இணைந்து தோள் கொடுத்தவர் பெயரிலேயே ரைட் என்பதை வைத்திருக்கும் ஜான் ரைட்.
இந்திய அணியில் 2000 முதல் 2005 காலகட்டம் வரை பயிற்சியாளராக இருந்தார் ரைட். இவர்தான் இந்தியாவின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளர் என்ற பெருமையை பெற்றார். இவரது பயிற்சி காலத்தில் தான், இந்திய அணியின் புகழ் பெற்ற டெஸ்ட் வெற்றியான ஈடன் கார்டனில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய சம்பவம் நிகழ்ந்தது. இந்த தொடரை 2-1 என இந்தியா வென்றது. பின்னர் ஆஸ்திரேலியா சென்று அங்கு டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது.
இதைத்தொடர்ந்து 2002 சாம்பியன்ஸ் டிராபி தொடரை இலங்கை அணியுடன் பகிர்ந்துகொண்டதோடு, 2003 உலகக் கோப்பை தொடரில் 20 ஆண்டுகள் கழித்து இறுதிப்போட்டி வரை சென்றது.
இந்திய அணியில் பயிற்சி காலம் முடிவுற்ற பிறகு நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ஜான் ரைட், பின்னர் ஐபிஎல் தொடரில் 2013 முதல் பயிற்சியாளராக இருந்தார். இவர் பயிற்சியாளராக இணைந்த முதல் ஆண்டிலேயே மும்பை இந்தியன்ஸ் முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. 2013 முதல் 2019 வரை எழு ஆண்டுகள் மும்பை அணி பயிற்சியாளராக இருந்தார் ரைட். இந்த காலகட்டத்தில் அந்த அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றது.
கிரிக்கெட் தவிர இசையில் ஆர்வம் கொண்ட ரைட், கிட்டார் இசை கருவி வாசிப்பதுடன் மியூசிக் ஆல்பமும் வெளியிட்டுள்ளார். களத்தில் பெரிதாக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாத ஜான் ரைட் மிகப் பெரிய கோபக்காரர். அவரது உண்மை முகம் பற்றி கங்குலி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இந்த நூற்றாண்டில் இந்திய அணியின் சிறந்த ஓபனராக இருந்தவர் வீரேந்தர் சேவாக். இவரது திறமையை கண்டறிந்து, சேவாக்கின் ஆட்டத்தை மெருகேற்றியதில் கங்குலி - ஜான் ரைட் பங்கு அளப்பறியது.
அந்த வகையில், சேவாக் காலரை பிடித்து ஜான் ரைட் Freezerஇல் நுழைத்த சம்பவம் பற்றி கங்குலி பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: "இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெட்ஸ்ட் தொடரில் இலங்கைக்கு எதிராக ஓவலில் நடைபெற்ற போட்டியில் ஓபனராக பேட் செய்த சேவாக, ஆட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என அடித்து ஆட முயற்சித்து அவுட்டாகியுள்ளார். சேவாக் எப்போது பந்தை காற்றில் பறக்கவிட்டாலும் கண்களை மூடிக்கொள்ளும் பழக்கம் கொண்டவராக இருந்தார் ரைட். அன்றைய போட்டியில் இந்தியா வென்ற பின்னர் டிரெசிங் ரூமில் சேவாக் மூட் அவுட்டாக இருந்தார். அத்துடன் அவர் இந்தியாவுக்கு திரும்புவதாகவும் தெரிவித்தார். பின்னர் விசாரித்தபோது ஜான் ரைட் தனது சட்டை காலரை பிடித்து பிரிட்ஜ் Freezerஇல் தள்ளி, இனிமேல் இப்படி ஷாட் ஆடினால் நீ இந்தியாவுக்கு தான் செல்ல வேண்டும் என வார்னிங் செய்ததாக கூறினார். கிரிக்கெட் மீது இப்படியொரு பையத்தியகாரதனமாக இருந்த பயிற்சியாளருடன் பணியாற்றினேன்" என்றார்.
ஜான் ரைட்டுக்கு முன், அவரது வருகைக்கு பின் என இந்திய அணியை ஒப்பிடும் விதமாக உருமாற்றி பயிற்சியாளராக திகழ்ந்து வந்த நியூசிலாந்தை சேர்ந்த ஜான் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்