IND vs WI: சதமடித்த கோலி, அரைசதமடித்த ஜடேஜா அவுட்! இந்தியா நிதான ஆட்டம்
சதமடித்த கோலியும், அரைசதம் அடித்த ஜடேஜாவும் அவுட்டான நிலையில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்கள் குவித்தது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி போர் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 86, ரவீந்திர ஜடேஜா 36 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் விராட் கோலி சதமடித்தார். இது கோலிக்கு டெஸ்ட் போட்டியில் 29வது சதமாகவும், சர்வதேச அளவில் 76வது சதமாகவும் அமைந்தது. அத்துடன் 500வது சர்வதேச போட்டியில் சதமடித்த வீரர் என்ற சாதனையும் புரிந்தார்.
100 ரன்களை கடந்த கோலி விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது சிங்கிள் ஓடும் முயற்சியில் துர்தஷ்டவசமாக ரன்அவுட்டானார். கோலி 206 பந்துகளில் 121 ரன்கள் எடுத்திருந்தார்.
மறுமுனையில் மிகவும் நிதானமாக பேட் செய்து வந்த ஜடேஜா, அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து 61 ரன்கள் எடுத்த ஜடேஜா ரோச் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணியின் விக்கெட் சரிவை தடுத்து நிதானமாக பேட் செய்து ரன் குவித்து வந்த இந்த இருவரும் அவுட்டானார்கள்.
கோலி - ஜடேஜா ஆகியோர் இணைந்து 159 ரன்கள் சேர்த்தனர். இவர்கள் இருவரும் அவுட்டான நிலையில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், பவுலிங் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பேட் செய்து வருகின்றனர்.
இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷன் 18, அஸ்வின் 6 ரன்களுடன் அவுட்டாகமல் இருந்தனர். இரண்டாம் நாள் முதல் செஷனில் இந்தியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.
டாபிக்ஸ்