IND vs WI 2nd Odi: அமர்க்கள தொடக்கம், அப்செட் பினிஷ்! பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்க்கு எளிய இலக்கு
இஷான் கிஷன் - சுப்மன் கில் இணைந்து 90 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் அமைந்தபோதிலும் மோசமான ஷாட் தேர்வு காரணமாக 50 ஓவர்கள் கூட முழுமையாக பேட் செய்யாமல் 181 ரன்களில் ஆல்அவுட்டாகியுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சின்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
ஒன்பது மாதங்களுக்கு பிறகு இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் இந்திய ஒரு நாள் அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விளையாடவில்லை. இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டார்.
இதையடுத்து இந்திய அணியில் தொடக்க பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய இஷான் கிஷன் - சுப்மன் கில் ஆகியோர் நல்ல தொடக்கத்தை தந்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர். இஷான் கிஷான் அரைசதம் அடித்து 55 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 34 ரன்கள் அடித்தார்.
இவர்கள் அவுட்டான பிறகு பேட் செய்ய வந்த சஞ்சு சாம்சன் 9,அக்ஷர் படேல் 1, ஹார்திக் பாண்ட்யா 7 என ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இதனால் 113 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.
ஐந்தாவது விக்கெட்டாக சஞ்சு சாம்சன் அவுட்டானபோது மழை குறுக்கிட்டு ஆட்டம் சுமார் 30 நிமிடங்கள் வரை தடைப்பட்டது. பின்னர் மீண்டும் தொடங்கியபோது களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நிதானமாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ஜடேஜா 10, சூர்யகுமார் யாதவ் 24 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்கள். இவர்களை தொடர்ந்து வந்த ஷர்துல் தாக்கூர் 16 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து 37.3 ஓவரில் அணியின் ஸ்கோர் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தபோது இரண்டாவது முறையாக மழை குறுக்கிட்டது.
சிறிது நேரம் கழித்து ஆட்டம் தொடங்கிய நிலையில், பேட் செய்து வந்த குல்தீப் யாதவ் 8, உம்ரான் மாலிக் 0, முகேஷ் குமார் 6 ரன்களில் அவுட்டானார்கள். இதனால் 40.5 ஓவரில் இந்தியா 181 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களில் குடாகேஷ் மோதி, ரோமாரியோ ஷெப்பர்டு ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அமர்க்களமான தொடங்கிய இந்திய இன்னிங்ஸ் அப்செட் ஆக்கும் விதமாக முடிந்திருக்கும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்