ICC World Cup 2023 Schedule: வெளியான முழு அட்டவணை! 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் - சென்னையில் 5 ஆட்டங்கள்
இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பை தொடருக்கான முழு அட்டவணையை தொடர் தொடங்குவதற்கு 100 நாள்கள் இருக்கும் நிலையில் ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல் மற்றும் இறுதிபோட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. சென்னையில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெறுகின்றன.
உலகக் கோப்பை 2023 ஒரு நாள் தொடர் இந்த முறை இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என கூட்டாக நடத்தி வந்த உலகக் கோப்பை ஒரு நாள் தொடரை முதல் முறையாக இந்தியா மட்டும் நடத்தவுள்ளது.
இதையடுத்து உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை 46 நாள்கள் நடைபெறுகிறது. இரண்டு அரையிறுதி போட்டி மற்றும் இறுதி போட்டிக்கு ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலுள்ள 10 மைதானங்களில் நடைபெறுகிறது. அதன்படி அகமதாபாத், சென்னை, பெங்களூரு, தரம்சாலா, டெல்லி, ஹைதராபாத், லக்னோ, கொல்கத்தா, மும்பை, புணே ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
முதல் போட்டி இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இது கடந்த 2019 உலகக் கோப்பை தொடர் இறுதிப்போட்டியின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை தொடரில் ரவுண் ராபின் முறையில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் டாப் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அரையிறுதி போட்டிகள் மும்பை, கொல்கத்தா மைதானங்களில் நடைபெறவுள்ளன. முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 15ஆம் தேதி மும்பையிலும், இரண்டாவது அரையிறுதி போட்டி நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.
இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி அக்டோப்ர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகின்றன.
இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியா விளையாடும் ஒரேயொரு போட்டி மட்டுமே நடைபெறுகிறது.
அதேபோல் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன.
அரையிறுதி போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் விதமாக அமைந்தால் அந்த போட்டி கொல்கத்தாவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை உலகக் கோப்பை 2023 தொடரில் விளையாட இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கேதசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இதைத்தொடர்ந்து தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி 9 மற்றும் 10வது அணியாக உலகக் கோப்பை 2023 தொடரில் பங்கேற்கும்.
உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு பயிற்சி போட்டிகள் குவாஹட்டி, திருவனந்தபுரம் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்