World Cup 2023: இந்தியா - பாகிஸ்தான் தேதி மட்டுமல்ல..! மேலும் 9 முக்கிய போட்டி தேதி மாற்றம் - முழு விவரம் அறிவிப்பு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  World Cup 2023: இந்தியா - பாகிஸ்தான் தேதி மட்டுமல்ல..! மேலும் 9 முக்கிய போட்டி தேதி மாற்றம் - முழு விவரம் அறிவிப்பு

World Cup 2023: இந்தியா - பாகிஸ்தான் தேதி மட்டுமல்ல..! மேலும் 9 முக்கிய போட்டி தேதி மாற்றம் - முழு விவரம் அறிவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 09, 2023 09:15 PM IST

உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியின் அட்டவணை ஒருநாள் முன்னதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் 9 ஆட்டங்களின் அட்டவணையிலும் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் மோதும் உலகக் கோப்பை 50 ஓவர் போட்டி தேதி மாற்றம்
இந்தியா - பாகிஸ்தான் மோதும் உலகக் கோப்பை 50 ஓவர் போட்டி தேதி மாற்றம்

இதையடுத்து உலகக் கோப்பை தொடரின் போட்டி அட்டவணை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த அட்டவணையில் மாற்றம் செய்து, புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகமே எதிர்நோக்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிகள் உள்பட 9 போட்டிகள் நடைபெறும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி, ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளன. அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி விழாவின் முதல் நாள் என்பதால், பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக குஜராத் போலீஸ் தெரிவித்ததை தொடர்ந்து, இந்த மாற்றமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த போட்டி மாற்றத்தின் விளைவாக மேலும் சில போட்டிகளின் அட்டவணையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியாவின் கடைசி லீக் ஆட்டம் நெதர்லாந்து அணிக்கு எதிராக பெங்களூருவில் நவம்பர் 11ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டி நவம்பர் 12ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போட்டி, அக்டோபர் 15ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 12ஆம் தேதி ஹைதரபாத்தில் வைத்து பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுவதாக இருந்த போட்டி அக்டோபர் 10ஆம் தேதிக்கும், அக்டோபர் 12இல் ஆஸ்திரேலியா - தென்ஆப்பரிக்கா அணிகள் லக்னோவில் விளையாட இருந்த போட்டி அக்டோபர் 13ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது.

நியூசிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 14இல் சென்னையில் நடைபெற இருந்த நிலையில், அந்த போட்டி அக்டோபர் 13ஆம் தேதிக்கு பகல் இரவு ஆட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அதோபோல் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையே அக்டோபர் 10ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெற்ற இருந்த பகலிரவு போட்டி, பகல் ஆட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியானது காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

நவம்பர் 12ஆம் தேதி ஆஸ்திரேலியா - வங்கதேசம் மோதும் போட்டி பகல் ஆட்டமாக புனேவிலும், இங்கிலாந்து - பாகிஸ்தான் போட்டி மதியம் 2 மணிக்கு கொல்கத்தாவிலும் நடைபெறுவதாக இருந்த நிலையில், அந்த போட்டி ஒரு நாள் முன்னதாக நவம்பர் 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி, கடந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்ட இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதற்கிடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ரசிகர்கள் ஐசிசி அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தங்களது விருப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, டெல்லி, புனே நகரில் நடைபெறும் இந்தியா விளையாடும் போட்டிகளின் டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்குகிறது. இதன்பின்னர் செப்டம்பர் 1ஆம் தேதி தரம்சாலா, லக்னோ, மும்பை நகரங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையும் நடைபெறுகிறது. செப்டம்பர் 2ஆம் தேதி பெங்களூரு, கொல்கத்தா போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும், செப்டம்பர் 3ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இந்திய போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும், செப்டம்பர் 15ஆம் தேதிி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்யப்படவுள்ளன.

ஆக்ஸ்ட் 25ஆம் தேதி மற்ற அணிகளுக்கான பயிற்சி போட்டி மற்றும் லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. ஆகஸ்ட் 30ஆம் தேதி குவாஹட்டி மற்றும் திருவனந்தபுரத்தில் இந்தியா விளையாட இருக்கும் பயிற்சி போட்டிகளுக்கான விற்பனை தொடங்குகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner
மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.