HT Sports Spl: 20 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் விளையாடும் ஒரே வீரர்! Test கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் எடுத்த Pacer
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Spl: 20 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் விளையாடும் ஒரே வீரர்! Test கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் எடுத்த Pacer

HT Sports Spl: 20 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் விளையாடும் ஒரே வீரர்! Test கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் எடுத்த Pacer

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 30, 2023 07:14 AM IST

இங்கிலாந்து அணிக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்கு உரியவராக இருந்து வருபவர் ஜேமி ஆண்டர்சன். 40 வயதை கடந்த போதிலும் தொடர்ந்து தனது ஸ்விங் பவுலிங்கால் பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுக்கும் பவுலராகவே இருந்து வருகிறார்.

இங்கிலாந்து அணியில் 20 ஆண்டுகளாக விளையாடி வரும் ஜேமி ஆண்டர்சன்
இங்கிலாந்து அணியில் 20 ஆண்டுகளாக விளையாடி வரும் ஜேமி ஆண்டர்சன்

2002ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமானார் ஜேமி ஆண்டர்சன். ஆரம்பத்தில் இவரது ஓவர்கள் அடிக்கப்பட்டாலும், பின்னர் தனது ஸ்விங் பவுலிங் மூலம் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தக்கூடிய பவுலராக உருவெடுத்தார். இதனால் 2003இல் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு மிரட்டலான ஸ்பெல்களை பவுலிங் செய்து உலகின் சிறந்த பவுலராக மெல்ல மெல்ல உருவெடுத்தார் ஆண்டர்சன். ஒரு நாள் போட்டிகளிலும் கவனத்தை பெறும் விதமாக இவரது பந்து வீச்சு அமைந்திருந்தன.

இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் லங்காஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணிக்காக முதன் முதலில் கிரிக்கெட் விளையாட தொடங்கினார் ஆண்டர்சன். தென்ஆப்பரிக்காவில் நடைபெற்ற 2003ஆம் ஆண்டு உலக கோப்பை ஒரு நாள் தொடரில் முக்கிய பவுலராக இடம்பிடித்தார் ஆண்டர்சன்.

2007ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான ஆண்டர்சன், அந்த ஆண்டில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்றார். 2010ஆம் ஆண்டில் இங்கிலாந்து டி20 உலகக் கோப்பையை வென்றது. சர்ப்ரைசாக இங்கிலாந்து அணி முதல் முறையாக வெல்லும் ஐசிசி கோப்பையாகவும் இது அமைந்தது. இந்த அணியில் அங்கம் வகித்து தற்போது வரை இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடி வரும் ஒரே வீரராக இருந்து வருகிறார் ஆண்டர்சன்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் கடைசியாக 2015இல் விளையாடிய ஆண்டர்சன் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரராகவும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக இருந்து வருகிறார் ஜேமி ஆண்டர்சன்.

இதுவரை 183 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் ஆண்டர்சன். இதன்மூலம் அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடி சச்சின் டென்டுல்கருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார் ஆண்டர்சன். சச்சின் டென்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 689 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் இவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில் நான்காவது இடத்திலும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் முதல் இடத்திலும் உள்ளார். 156 டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் அதிகவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய வீரராகவும், 192 விக்கெட்டுகள் விக்கெட் கீப்பரால் கேட்ச் செய்யப்பட்டு விக்கெட் எடுத்த முதல் வீரராகவும் உள்ளார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட், ஒரு நாள், டி20 கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 48, 983 பந்துகளை வீசியுள்ளார் ஆண்டர்சன். இதன் மூலம் அதிக பந்துகளை பவுலிங் செய்திருக்கும் நான்காவது வீரராக உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளை போல் ஒரு நாள் போட்டியிலும் 194 போட்டிகளில் 269 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்து அணியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது பவுலராக உள்ளார். மொத்த 976 விக்கெட்டுகளை தற்போது ஆண்டர்சன் கைப்பற்றிய சர்வதேச விக்கெட்டுகளாக உள்ளன. அதேபோல் முதல் தர கிரிக்கெட்டில் 1000 விக்கெட்டுகள் எடுத்த பவுலராக இருந்து வருகிறார்.

பேட்டிங்கிலும் சில குறிப்பிடும்படியான இன்னிங்ஸை விளையாடியுள்ளார் ஆண்டர்சன். இங்கிலாந்து பேட்ஸ்மேனான ஜோ ரூட்டுடன் இணைந்து, டெஸ்ட் போட்டியில் 198 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் 10வது விக்கெட்டுக்கான மிகப் பெரிய பார்ட்னர்ஷிப்பாக அமைந்துள்ளது.

ஸ்விங் பவுலிங்கால் பேட்ஸ்மேன்கள் மிரட்டும் பவுலராக இருந்து வரும் ஆண்டர்சன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் வீரராக இருந்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் ஆஷஷ் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஆண்டர்சன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.