HT Sports Special: முதல் ஒரு நாள் போட்டியிலேயே சாதித்த ஜிம்பாப்வே - ஆஸி.,யை வீழ்த்த காரணமான இந்திய முன்னாள் பயிற்சியாளர்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special: முதல் ஒரு நாள் போட்டியிலேயே சாதித்த ஜிம்பாப்வே - ஆஸி.,யை வீழ்த்த காரணமான இந்திய முன்னாள் பயிற்சியாளர்

HT Sports Special: முதல் ஒரு நாள் போட்டியிலேயே சாதித்த ஜிம்பாப்வே - ஆஸி.,யை வீழ்த்த காரணமான இந்திய முன்னாள் பயிற்சியாளர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 09, 2023 06:40 AM IST

உலகக் கோப்பை வெல்லும் பேவரிட் அணிகளில் ஒன்றாக இருந்த அணியாகவும், முதல் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் பைனலிஸ்டாகவும் இருந்த ஆஸ்திரேலியா அணியை, கத்துக்குட்டி அணியாக இருந்த ஜிம்பாப்வே அணி சரியாக 40 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வீழ்த்தி உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ஜிம்பாப்வே அணி வீரர்கள்
ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ஜிம்பாப்வே அணி வீரர்கள்

அந்த வகையில் கத்துக்குட்டி அணிகளிடம் டாப் அணிகள் தோல்வியடையும் சம்பவங்கள் ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் தவறாமல் இடம்பெறும் நிகழ்வாகவே இருந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் முதல் அதிக முறை உலகக் கோப்பை தொடரை வென்ற ஆஸ்திரேலியா அணியும் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் 1983 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை, முதல் முறையாக ஒரு நாள் போட்டிகளில் களமிறங்கிய கத்துக்குட்டி அணியான ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிகழ்வு இதே நாளில் நிகழ்ந்துள்ளது. அப்போது ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக இருந்த டங்கன் பிளெட்சர் இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

நாட்டிங்காமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இதில் அணியின் கேப்டனான பிளெட்சர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக முக்கியமான கட்டத்தில் களமிறங்கி, 69 ரன்கள் எடுத்து கடைசி வரை பேட் செய்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.

ஜிம்பாப்வே ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 94 ரன்கள் என இருந்தபோது பேட் செய்ய வந்த ப்ளெட்சர் அரைசதத்தை பூர்த்தி செய்து அணியை நல்ல வலுவான நிலைக்கு எடுத்து சென்றார்.

இதைத்தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 60 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் கெப்லர் வெசல்ஸ் 76, கடைசி கட்டத்தில் பேட் செய்ய வந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரோட் மார்ஷ் 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தபோதிலும் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது.

பேட்டிங்கில் அரைசதம் அடித்து அணியை மீட்டது போல், பவுலிங்கிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கினார் பிளெட்சர். அன்றைய நாள் பிளெட்சருக்கான நாளாகவே அமைந்தது. இதனால் எவ்வித குழப்பமும் இன்றி அவர்தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சர்ப்ரைசிங்காக தங்களது முதல் ஒரு நாள் போட்டியை வெற்றியுடன், அதுவும் பலம் வாய்ந்த அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அணி என்ற பெருமையை ஜிம்பாப்வே அணி பெற்றது. முதல் போட்டியிலேயே உலகக் கோப்பை வெல்லும் பேவரிட் அணியாகவும், 1975 உலகக் கோப்பை தொடரின் பைனலிஸ்டாகவும் இருந்த பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை, டெஸ்ட் கிரிக்கெட் ஸ்டேட்டஸ் பெற்று 9 ஆண்டுகளே ஆகி, முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் விளையாடிய ஜிம்பாப்வே வீழ்த்தி சாதனை புரிந்தது, உலக கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்ய பார்வை பார்க்க வைத்தது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்களை பொறுத்தவரை இந்த தோல்வி மிகப் பெரிய அப்செட்டாகவே அமைந்தது. கிரிக்கெட் அப்செட்களில் மிக முக்கியமான போட்டியாக இது அமைந்துள்ளது. 

இதற்கு காரணமாக அமைந்த ஜிம்பாப்வே கேப்டனான டங்கன் பிளெட்சர் பின்னாளில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். இவர் பயிற்சியாளராக இருந்தபோதுதான் இந்திய அணி 2013ஆம் ஆண்டில் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இந்த தொடர்தான் இந்தியா வென்றிருக்கும் கடைசி ஐசிசி கோப்பையாக உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.