HT Sports Special: பாகிஸ்தான் உலகக் கோப்பை வெல்ல காரணமான பவுலர்! Variation காட்டுவதில் வார்னேவுக்கு முன்னோடி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special: பாகிஸ்தான் உலகக் கோப்பை வெல்ல காரணமான பவுலர்! Variation காட்டுவதில் வார்னேவுக்கு முன்னோடி

HT Sports Special: பாகிஸ்தான் உலகக் கோப்பை வெல்ல காரணமான பவுலர்! Variation காட்டுவதில் வார்னேவுக்கு முன்னோடி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 28, 2023 05:30 AM IST

திருப்புமுனை தரக்கூடிய லெக் ஸ்பின்னர், டெயில் வரிசையில் கொஞ்சம் பேட்டிங்கும் ஆடக்கூடிய பேட்ஸ்மேன் என பாகிஸஸ்தான் அணியில் 14 ஆண்டு காலம் சிறப்பான பங்களிப்பை அளித்த பவுலராக உள்ளார் முஸ்தாக் அகமத். பாகிஸ்தான் உலகக் கோப்பை வென்ற அணியில் முக்கிய ஸ்பின்னராக இடம்பிடித்திருந்தார்.

பாகிஸ்தான் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஸ்தாக் அகமத்
பாகிஸ்தான் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஸ்தாக் அகமத்

1992ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்ற பாகிஸ்தான் அணியில் பிரதான ஸ்பின்னராக அணியில் இடம்பிடித்திருந்தார் முஸ்தாக் அகமத். இந்த தொடரில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் ஸ்பின்னரான இவர் 8 இன்னிங்ஸ் விளையாடி மொத்தம் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

குறிப்பாக இறுதிப்போட்டியில் அற்புதமாக பந்து வீசிய இவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை வெல்வதற்கு காரணமாக அமைந்தார். உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமுக்கு அடுத்தபடியாக சிறந்த பவுலராக ஜொலித்தார்.

டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவதற்கு முன்னரே 1989இல் ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார் முஸ்தாக் அகமத். ஸ்பின்னராக இருந்தாலும் பேட்ஸ்மேனுக்கு கிராஸாக ஓடிவந்து இரண்டு கைகளையும் சுழற்றியவாறு அமைந்திருக்கும் இவரது பவுலிங் ஆக்‌ஷன் பார்ப்பதற்கு வேகப்பந்து வீச்சாளர் போன்றே இருக்கும். ஆனால் லெக் பிரேக், கூக்ளி என வேரியேஷன் காட்டி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் கில்லியாக இருந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் வார்னே வரவுக்கு முன் ஸ்பின்னர்களின் கிளாசிக் பவுலிங் ஸ்டைலில் இருந்து வித்தியாசப்படுத்தி பவுலிங் மாறுதல்கள் கொண்டு வந்து பேட்ஸ்மேன்களை குழப்பம் அடைய செய்வதில் முக்கிய பவுலராக திகழ்ந்தார் முஸ்தாக் அகமத்.

1990இல் டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமான முஸ்தாக் அகமத், அதிலும் முத்திரை பதிக்கும் விதமாக பவுலிங் செய்தார். திருப்புமுனை தரக்கூடியவராகவும் மேட்ச் வின்னராகவும் இருந்து வந்த இவர், டெயில் பேட்ஸ்மேனாக இருந்தாபோதிலும் பேட்டிங்கிலும் கணிசமான பங்களிப்பை தரக்கூடிய பேட்ஸ்மேனாக இருந்தார். சுருக்கமாக சொல்வதென்றால் அந்த காலகட்டத்தின் பவுலிங் ஆல்ரவுண்டராக இருந்தார் என கூறலாம்.

டெஸ்ட் போட்டிகள் விளையாடிய ஆரம்ப காலகட்டத்தில் விக்கெட் வீழ்த்துவதில் சிரமம் அடைந்து வந்த முஸ்தாக் அகமத்க்கு 1995 முதல் 1998 வரை சிறந்த காலகட்டமாக அமைந்தது. ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் குறைந்தது 10 விக்கெட்டுகளாவது எடுத்தார். பாகிஸ்தான் அணியை காட்டிலும் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்ற விளையாடிய இவர் சிறந்த கிரிக்கெட்டராக உருவெடுத்தார்.

1994ஆம் ஆண்டு மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கிய இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட தடை விதிக்கப்பட்டது. 2003 வரை பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்த முஸ்தாக் அகமத் மோசமான பார்ம் காரணமாக அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார்.

ஆனால் தொடர்ந்து கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வந்த இவர் 2008இல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை பெற்றார். பின்னர் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணி ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராகவும், 2013 ஐபிஎல் சீசனில் டெல்லி அணி ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராகவும் இருந்தார்.

கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக 85 போட்டிகள் விளையாடி 478 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக 52 டெஸ்ட், 144 ஒரு நாள் போட்டிகள் விளையாடி முறையே 185 டெஸ்ட் விக்கெட்டுகளும், 161 ஒரு நாள் விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

5.6 அடி உயரத்தில், மிகவும் பப்ளியான தோற்றத்தில் பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்த பவுலர்களில் ஒருவராக இருந்த முஸ்தாக் அகமத் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.