HT Sports Special: 1983 உலகக் கோப்பை ஹீரோ! ஸ்விங்கில் மிரட்டும் பவுலர் - டெயிலில் ஜொலிக்கும் பேட்ஸ்மேன்
இந்தியா முதல் முறையாக 1983ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்ற அணியில் ஒருவராகவும், பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அணிக்கு முக்கிய பங்களிப்பை அளித்தவருமாக இருப்பவர் பல்வீந்தர் சந்து. வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் இன் ஸ்விங் பவுலிங்கில் பேட்ஸ்மேன்களை மிரட்டகூடியவராக இருந்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒரு நாள்போட்டிகளில் 1982 முதல் 1984 வரை என மிக குறுகிய காலத்தில் மட்டுமே விளையாடியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை (அப்போது பாம்பே) அணிக்காக விளையாடிய இவர் பல்வேறு போட்டிகளில் பவுலிங்கில் தனித்துவமான பங்களிப்பை அணிக்கு தந்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது வேகப்பந்து வீச்சாளர் மதன்லால் காயத்தால் பாதிக்கப்பட்ட, அவருக்கு பதிலாக நான்காவது டெஸ்ட் போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டார் பல்வீந்தர் சந்து. முதல் போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மோக்சின் கான், ஹரூன் ராஷித் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார். இந்த போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அந்த அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்த நிலையில் 2 விக்கெட்டுகளை சந்து எடுத்திருந்தார்.
இதேபோட்டியில் பேட்டிங்கிலும் சரிவை சந்தித்த இந்திய அணியை மீட்ட சந்து, 9வது பேட்ஸ்மேனாக களமிறங்கி 71 ரன்கள் எடுத்து அணியின் டாப் ஸ்கோரராக இருந்தார். இதைத்தொடர்ந்து அடுத்த சில மாதங்கள் இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 68 ரன்கள் எடுத்து அணியின் டாப் ஸ்கோரராக திகழ்ந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னரே ஒரு நாள் போட்டியில் அறிமுகமான சந்துவுக்கு, முதல் போட்டி மற்றும் கடைசி போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக அமைந்தது.
தனது ஸ்விங் பவுலிங்கால் கவனம் ஈர்த்த சந்து, 1983 உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடினார். முதல் பேட் செய்த இந்திய அணியில் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கி 11 ரன்கள் அடித்து அவுட்டாகமல் இருந்ததுடன், சையத் கிர்மாணியுடன் இணைந்து 22 ரன்கள் சேர்த்தார். குறைவான ஸ்கோர் எடுத்த இந்திய அணிக்கு இவர்களின் இந்த பார்ட்னர்ஷிப் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
அதன் பின்னர் பவுலிங்கில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஓபனரான கோர்டன் கிரீனிட்ஜை கிளீன் போல்டு ஆக்கி இந்திய அணிக்கு திருப்புமுனை கொடுத்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஃபவுத் பேக்கஸ் விக்கெட்டையும் சந்து வீழ்த்தினர். இந்த போட்டியில் 9 ஓவர்கள், ஒரு மெய்டன், 32 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் என சிறப்பான ஸ்பெல் வீசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை அளித்தார்.
உலகக் கோப்பை தொடருக்கு பின் சில டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் சந்து பங்கேற்றார். அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். மீதமிருக்கும் அந்த ஒரு விக்கெட்டை வீழ்த்தியது சந்து தான். இதுவே இவரது கடைசி டெஸ்ட் போட்டியாக அமைந்தது. தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்ற அவர் 1984இல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கு பிறகு அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஓய்வுக்கு பின்னர் மும்பை, பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார் சந்து. அதேபோல் 1990களில் கென்யாவில் உள்ள கிளப் போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார். குறுகிய காலாமே இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடினாலும் பேர் சொல்லும் விதமாக ஆட்டத்தை வெளிப்படுத்திய பல்வீந்தர் சந்துவுக்கு இன்று 67வது பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்