HT Sports Special: ஆஸி.,க்கு எதிராக முதல் வெற்றி பெற்று தந்த கேப்டன் - இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வென்ற முதல் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக செயல்பட்டவர் குலாப்ராய் ராம்சந்த். இவர்தான் முதல் முறையாக கமர்ஷியல் விளம்பரங்களில் தோன்றிய இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டு மீது மிகவும் ஆர்வமும், பற்றும் கொண்டவராக இருந்து வரும் இவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்னர், மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது தனது மனைவியை பாகிஸ்தான் - வங்கதேசம் இடையிலான போட்டிக்கான ஸ்கோரை தெரிந்துகொண்டு வருமாறு கேட்டுள்ளார்.
இந்திய அணிக்காக 1952 முதல் 1960 காலகட்டத்தில் 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரேயொரு தொடரில் கேப்டனாக செயல்பட்ட இவர் அதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியாவுக்கு முதல் வெற்றியை பெற்று தந்தார்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு பிரிட்டீஷ் இந்தியாவின் கராச்சியில் பிறந்தவர் குலாப்ராய் ராம்சந்த். சிந்தி குடும்பத்தில் பிறந்த இவர், தனது கிரிக்கெட் வாழ்க்கையை சிந்த் அணிக்காக விளையாடி தொடங்கினார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு ராம்சந்த், பாம்பே (இப்போதைய மும்பை) அணிக்காக விளையாடியுள்ளார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பாம்பே அணிக்காக விளையாடியபோது 10வது பேட்ஸ்மேனாக களமிறங்கி 55 மற்றும் 80 ரன்கள் எடுத்து நாட்அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 1952ஆம் ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் சர்ப்ரைஸாக தேர்வு செய்யப்பட்டார். முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் டக் அவுட்டானதுடன், இந்த டெஸ்ட் தொடரில் 68 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து இவருக்கு 1952-53ஆம் ஆண்டில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவரை ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டார். ஐந்து போட்டிகள் கொண்ட அந்த தொடரில் 249 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் முறையாக நியூசிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்தார். 1959ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த தொடரில் பேட்டிங், பவுலிங்கிலும் தனிப்பட்ட முறையில் ஏமாற்றியபோதிலும், கேப்டன்சியில் கலக்கிய இவர் கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தார்.
இந்த தொடரை 1-2 என இந்தியா தோல்வியுற்றபோதிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒயிட்வாஷ் ஆகும் என எதிர்பார்ப்பட்ட நிலையில் இந்தியா வெற்றி பெற்றது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
பேட்டிங்கில் அதிரடியும், பவுலிங்கில் இன்ஸ்விங் மற்றும் அவுட்ஸ்விங் என இரண்டிலும் கலக்கியவராக இருந்துள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1975ஆம் ஆண்டு உலக கோப்பை அணியின் மேனேஜராக இருந்தார்.
அதன் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தில் 26 ஆண்டுகள் பணிபுரிந்த குலாப்ராய் ராம்சந்த், மாரடைப்பால் உயிரிழந்தார்.
ராம்சந்த் ஆட்ட திறன் தற்போதைய ஒரு நாள் போட்டிகளில் விளையாடு ஆல்ரவுண்டருக்கு ஈடுகொடுக்கும் விதமாக அமைந்திருக்கும் என வர்ணிக்கப்படுகிறது. மீடியாக்களின் மீது கூச்ச சுபாவம் கொண்ட ராம்சந்த் ஒரு விருது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவர் அருகே வந்த ஆஸ்திரேலியா கேப்டன் மார்க் டெய்லர், தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, எனது அணி சார்பாக விருது வாங்குகிறேன். எங்களது அணிக்கு எதிராக முதல் வெற்றி பெற்ற இந்திய அணியை தலைமை தாங்கியவருடன் கைகலுக்க விரும்புகிறேன்" எனக் கூறி கைகளை குலுக்கி சென்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 33 போட்டிகளில் 1180 ரன்கள், 41 விக்கெட்டுகள், உள்ளூர் கிரிக்கெட்டில் 145 போட்டிகளில் 6026 ரன்கள், 255 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டாப் ஆர்டர் பேட்டிங், டாப் ஆர்டர் பவுலிங் என இந்திய அணியில் ஆல்ரவுண்ராக ஜொலித்த குலாப்ராய் ராம்சந்த்க்கு இன்று 96வது பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்