Hardik Pandya: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் - 'அடிப்படை வசதி கூட இல்லனா எப்படி?' குமுறிய பாண்ட்யா
அம்பயர் குறித்து நேரடியாக விமர்சித்த இந்திய மகளிர் அணி கேப்டன் இரண்டு போட்டிகள் விளையாட தடை பெற்ற நிலையில், தற்போது இந்திய ஒரு நாள் அணியன் நடப்பு கேப்டனாக செயல்பட்ட பாண்ட்யா அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வீரர்கள் தவித்ததாக குமுறியுள்ளார்.ா
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் டாக்காவில் வங்கதேசம் பெண்கள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டி டை ஆன நிலையில், போட்டி முடிவுக்கு பின்னர் அம்பயர் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்தார் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர். இதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த ஐசிசி இரண்டு போட்டிகள் விளையாட தடையும் விதித்தது.
இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. டிரினிடாட்டில் உள்ள டரெளபாவில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் பிரெய்ன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டி நடைபெற்றது.
வெற்றியாளரை தீர்மானிக்கும் விதமாக அமைந்த இந்த போட்டியில் இந்தியா 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன்பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பேசிய இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் குறித்து விமர்சனத்தை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பரிசளிப்பு நிகழ்வில் பேச வந்த ஹர்திக் பாண்ட்யாவிடம், வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் வீரரும் தொகுப்பாளருமான டேரங் கங்கா, முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்ற இந்த மைதானத்தில் வீரர்களுக்கான வசதிகள் எப்படி இருந்தது என்று கேட்டார்.
இதற்கு இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பதில் அளித்த போது, " கிரிக்கெட் விளையாடுவதற்கான சிறந்த மைதானமாக இது உள்ளது. அடுத்த முறை நாங்கள் இங்கு விளையாட வரும்போது இன்னும் சில விஷயங்கள் சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம். இங்கு பயணம் செய்ய வரும் அணிகளுக்கு அடிப்படை விஷயங்களில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கவனம் செலுத்த வேண்டும்.
நாங்கள் சொகுசு ஏற்பாடுகள் இல்லை என கூறவில்லை. அதேசமயம் அடிப்படை விஷயங்களாவது இருக்க வேண்டும் என விரும்புகிறோம்." என்று கூறினார்.
ஒரு நாள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் டிரினிடாட்டில் இருந்து பார்படாஸுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் தாமதமானதால், தூக்கமின்மை பிரச்னைக்கு இந்திய அணி வீரர்கள் ஆளாகினர்.
விமான நிலையத்திலேயே நீண்ட நேரம் காத்திருந்த வீரர்கள், பரபரப்பான பயண அட்டவணை காரணமாக டெஸ்ட் அணியின் விளையாடி வீரர்கள் பார்படோஸில் பயிற்சியை தவிர்க்க வேண்டிய சூழல் உருவானது.
இந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக ஹர்திக் பாண்ட்யா இப்படி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0, ஒரு நாள் தொடர் 2-1 என்ற கணக்கில் வென்றுள்ள இந்திய அணி, அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 நாளை நடைபெறவுள்ளது. மூன்றாவது ஒரு நாள் போட்டி நடைபெற்ற அதே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்