Fifa 2022 World Cup: மொராக்கோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fifa 2022 World Cup: மொராக்கோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

Fifa 2022 World Cup: மொராக்கோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

I Jayachandran HT Tamil
Dec 16, 2022 05:56 AM IST

பிபா உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது.

வெற்றிக்களிப்பில் பிரான்ஸ் அணியினர்
வெற்றிக்களிப்பில் பிரான்ஸ் அணியினர்

மொராக்கோவை வீழ்த்தியதன் மூலமாக 4-வது முறையாக பிரான்ஸ் அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நள்ளிரவு அல்பேத் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியின் 5-வது நிமிடத்திலே பிரான்ஸ் அணி வீரர் தியோ ஹெர்னண்டஸ் தனது அணிக்கான முதல் கோலை அடித்து ரசிகர்களை பரவசமடையச் செய்தார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ அணியினர் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் இடையே ஆட்டம் அனல் பறந்தது. இந்த சூழலில் ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ராண்டல் கோலோ முஆனி தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்து அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கினார்.

பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ அணியினர் எவ்வளவோ போராடியும் கோல் அடிக்கும் வாய்ப்பை இழந்தனர்.

இதைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் மேற்கொண்டும் கோல் எதுவும் அடிக்காததால் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணியை உலகக் கோப்பை இறுதி வாய்ப்பைப் பெறவிடாமல் வெளியேற்றியது.

இதன் மூலம் வரும் டிசம்பர் 18ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையே உலகக் கோப்பை 2022இன் மகுடத்துக்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி இந்தமுறை உலகக் கோப்பையைக் கைப்பற்றிவிடவேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், அர்ஜெண்டினாவுக்கு கடும் சவாலைத் தரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உலகக் கோப்பைப் போட்டிதான் மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பைப் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதில் 5 கோல் போட்டுள்ள லியோனல் மெஸ்ஸி உலகக் கோப்பைக்கான கோல்டன் பூட்டை வெல்வார் என்று அவரது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இதனிடையே நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வரும் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் பிரான்ஸ் அணி லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் முதலிடம் பிடித்தது.

2-வது ரவுண்டில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தையும், கால்இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும் பதம் பார்த்து அரைஇறுதியை எட்டியிருந்தது.

இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக அரைஇறுதி வரை நுழைந்து ஆச்சரியப்படுத்தியிருந்தது மொராக்கோ. அரைஇறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சரித்திர சிறப்பையும் பெற்றுள்ளது.

 

 

Whats_app_banner

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.