FIFA world cup 2022: கத்தாரை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய ஈகுவடார்
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் கத்தார் அணியை வீழ்த்தி தென் அமெரிக்கா நாடான ஈகுவடார் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடர் முடிவுற்றதை தொடர்ந்து விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக கால்பந்து திருவிழாவாக உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கோலகலமாக தொடங்கியுள்ளது. 22வது உலகக் கோப்பை தொடராக அமைந்திருக்கும் இந்த தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக மத்திய கிழக்கு நாடான கத்தாரில் நடைபெறுகிறது.
இந்த தொடரின் தொடக்க நாளில் ஏ பிரிவிலிருந்து தொடரை நடத்தும் கத்தார், தென் அமெரிக்கா நாடான ஈகுவடார் நாடுகள் பலப்பரிட்சை நடத்தின. கால்பந்து அணிகளில் மிகவும் பழமையான அணியாக திகழும் ஈகுவடார் இதுவரை நான்கு முறை உலகக் கோப்பை விளையாடியுள்ளது.
2006ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் நாக்அவுட் வரை தகுதி பெற்று வெளியேறியது, அணியின் சிறந்த பங்களிப்பாக அமைந்துள்ளது.
கத்தார் அணியை பொறுத்தவரை 50 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டுகளில் பங்கேற்று வந்தாலும், முதல் முறையாக தொடரை நடத்தும் நாடு என்கிற அந்தஸ்துடன் உலகக் கோப்பை தொடரில் களமிறங்கியுள்ளது.
இதையடுத்து கத்தார் - ஈகுவடார் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணி வெற்றி பெற்றது. போட்டி தொடங்கியது முதல் அட்டாக்கிங் ஆட்டத்தில் கவனம் செலுத்திய ஈகுவடார் அணி, ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரின் முதல் கோல் அடித்தது. இந்த கோலை ஈகுவடார் வீரர் என்னர் வலென்சியா அடித்தார்.
இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் வலென்சியா தனது அணிக்கு இரண்டாவது கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவதற்குள்ளாகவே ஈகுவடார் அணி 2 கோல்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் முதல் பாதி வரை அடுத்த கோல்கள் அடிக்கப்படாத நிலையில், ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடர்ந்தது. இரண்டு கோல்கள் முன்னிலை பெற்ற போதிலும், தொடர்ந்து அட்டாக் ஆட்டத்தை ஈகுவடார் வீரர்கள் வெளிப்படுத்தினர். பதிலுக்கு கத்தார் அணியினர் கோல் அடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால் கடைசி வரை அது பலன் அளிக்காமல் போனது.
இறுதியில் முழு ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கணக்கில் வெற்றியுடன் ஈகுவடார் அணி தொடங்கியுள்ளது.
டாபிக்ஸ்