Fifa world cup 2022:பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா! கண்ணீருடன் விடைபெற்ற நெய்மார்
ஜாம்பவான் அணியான பிரேசிலுக்கு இணையாக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குரோஷியா. பின் பெனால்டி ஷூட் அவுட்டில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் கோலாக்கி அரையிறுதிக்கு நுழைந்தது குரோஷியா.
பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டிகளில் தொடங்கியுள்ளன. இதில் முதல் காலிறுதி போட்டி 5 முறை சாம்பியனான பிரேசில் - கடந்த உலகக் கோப்பையில் அரையிறுதி வரை தகுதி பெற்ற குரோஷியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குள் நுழையும் என்பதால் ஆட்டம் மிகவும் பரபரப்பாகவே நடைபெற்றது.
இருஅணிகளும் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடி வந்த நிலையில், கோல் அடிக்கும் முயற்சியில் மாறி மாறி ஈடுபட்டனர். ஆனால் இரு அணி வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டம் மூலம் அவை நிகழாமலேயே போனது.
முதல் பாதி வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் இரண்டாவது பாதி ஆட்டத்தை தொடர்ந்தது. அப்போது கோல் முயற்சியானது பலன் அளிக்காமலேயே போனது. பல்வேறு வாய்ப்புகள் பிரேசில், குரோஷியா அணிகளுக்கு கூடி வந்த போதிலும் கோலாக மாற்ற முடியாமல் போனது. இதனால் முழு ஆட்ட நேர முடிவில் ஒரு கோல் கூட அடிக்காமல் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
இதைத்தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில், பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் ஆட்டத்தின் 106வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோல் அடித்தார். 14 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் தடுப்பாட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருக்கும் பிரேசில் வெற்றி பெறலாம் என்று இருந்தது.
அப்போது ஆட்டம் முடிவதற்கு 3 நிமிடம் மீதமிருந்த போது 117வது நிமிடத்தில் குரோஷியா வீரர் பெட்கோவிக் அசத்தலாக கோல் அடித்த சமநிலை பெற வைத்தார்.
இதனால் கூடுதல் நேரத்திலும் 1-1 என ஆட்டம் சமநிலை அடைந்ததால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதல் நான்கு வாய்ப்புகளையும் கோலாக்கியது குரோஷியா அணி.
ஆனால் பிரேசில் அணி இரண்டு வாய்ப்புகள் வீணாக்கியது. முதல் வாய்ப்பு ரோட்ரிகோ வீண் செய்த நிலையில், மற்றொரு வாய்ப்பை மார்கினோஸ் அடித்த ஷாட் கோல் போஸ்டில் பட்டு வெளியேறியது.
இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற குரோஷியா, தொடர்ச்சியாக இரண்டாவது முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த உலகக் கோப்பை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற கனவுடன் இருந்த பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார், தனது அணி வெளியேறிய நிலையில் சோகம் தாங்கி கண்ணீருடன் விடை பெற்றார்.
இந்தப் போட்டியில் பிரதான 90 நிமிடங்களில் பிரேசில் அணி 12 ஷாட்கள் டார்கெட்டை நோக்கி அடித்தன. அதில் அவற்றை சிறப்பாக தடுத்த குரோஷியா கோல் கீப்பர் டோமினிக் லிவாகோவிக் பிரேசில் வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
ஏற்கனவே குரோஷியா அணி நாக்அவுட் சுற்றில் ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி முறையிலேயே வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பெனால்டியின்போது மூன்று கோல்களை சரியாக தடுத்து ஆட்டத்தின் நாயகனாக ஜொலித்தார் கோல்கீப்பர் டோமினிக் லிவாகோவிக். இப்போது மீண்டும் பிரேசிலுக்கு எதிரான போட்டியில் அவர்களை கோல் அடிக்க விடாமல் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.