Fifa world cup 2022: ஸ்பெயினுக்கு அதிர்ச்சி கொடுத்த மொரக்கோ காலிறுதிக்கு தகுதி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fifa World Cup 2022: ஸ்பெயினுக்கு அதிர்ச்சி கொடுத்த மொரக்கோ காலிறுதிக்கு தகுதி

Fifa world cup 2022: ஸ்பெயினுக்கு அதிர்ச்சி கொடுத்த மொரக்கோ காலிறுதிக்கு தகுதி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 07, 2022 08:48 PM IST

ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டியில் ஸ்பெயின் அணிக்கு கடுமையாக சவால் அளித்து விளையாடிய மொராக்கோ அணி, இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

ஸ்பெயின் அணிக்கு எதிராக பெனால்ட் ஷூட் அவுட்டில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மொராக்கோ வீரர்கள்
ஸ்பெயின் அணிக்கு எதிராக பெனால்ட் ஷூட் அவுட்டில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மொராக்கோ வீரர்கள் (AFP)

இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன் அணியான ஸ்பெயின் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் திண்டாடியது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மார்கோ அசென்சியோ அடித்த அற்புதமான ஷாட் கோல் போஸ்டின் மீது பட்டு வெளியேறிய நிலையில் கோல் கிடைக்காமல் போனது.

கிடைத்த அனைத்து வாய்ப்புகளை இரு அணிகளும் கோல்களாக மாற்ற மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. முழு ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின், மொராக்கோ அணிகள் கோல் அடிக்காத நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக அளிக்கப்பட்ட 30 நிமிடங்களிலும் இரு அணி வீரர்களும் கங்கணம் கட்டிக்கொண்டு கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் கடைசி வரை அது நிகழாமலேயே போனது.

இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கபட்டது. மொராக்கோ அணி தனது முதல் 4 வாய்ப்புகளில் மூன்றை கோலாக்கியது. அந்த அணியின் அப்டெல்ஹாமிட் சபிரி, ஹகிம் ஜியேச், அச்ராப் ஹகிமி ஆகியோர் தங்கள் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தனர்.

அதேசமயம் ஸ்பெயின் அணி தங்களது முதல் 3 வாய்ப்புகளிலும் கோல் அடிக்க தவறியது. இதில் ஸ்பெயின் வீரர் பாப்லோ சராபி பந்தை பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றாமல் கம்பத்தில் அடித்தார். இதன் பின்னர் கார்லோஸ் சோலெர், கேப்டன் செர்ஜியோ ஆகியோர் அடித்த பந்துகளை மொராக்கோ கோல்கீப்பர் தடுத்தார்.

இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட்டில் மொராக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி முதல் முறையாக கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.