Fifa world cup 2022: மொராக்கோ கனவு தகர்ந்தது.. பைனலுக்கு முன்னேறியது பிரான்ஸ்!
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி, மொராக்கோவை வீழ்த்தி தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தோகாவின் அல் பேத் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 2-வது அரை இறுதி போட்டியில் மொராக்கோ அணியுடன் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மோதியது.
ஆட்டம் தொடங்கிய 5 ம் நிமிடத்திலேயே பிரான்ஸ் அணியின் தியோ ஹெர்னாண்டஸ் முதல் கோல் அடித்து அசத்தினார். எனினும் தடுப்பாட்டத்தில் பலம்வாய்ந்த மொரக்கோ வீரர்களும் சளைக்காமல் வேகம் காட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.
வரலாற்றில் முதன்முறையாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள மொராக்கோ அணி மீதும் எதிர்பார்ப்பு நிலவியது. எனவே, ஆட்டத்தின் இரண்டாம் பாதியிலும் இரு அணிகளும் கடுமையாக போராடியது. ஆனால், 79 வது நிமிடத்தில் பிரான்சின் மொலோ முவானி இரண்டாவது கோலை அடித்து மொரக்கோவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மொராக்கோ வீரர்களும் கடைசி வரை போராடினர். ஆனால், அவர்களின் போராட்டம் வீணானது.
இந்த போட்டியில் 2-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் முதல் முறையாக அரையிறுதி வரை வந்த மொராக்கோ அணி ஏமாற்றம் அடைந்தது.
அதேநேரம், இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை பிரான்ஸ் எதிர்கொள்ள உள்ளது. இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெறும் இத்தாலி, பிரேசிலுக்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டு முறை உலகக்கோப்பை வென்ற அணி என்ற பெருமை பிரான்ஸ் அணிக்கு கிடைக்கும்.
பிரான்ஸ் - அர்ஜென்டினா இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் ஞாயிறன்று (டிச.18) நடைபெறும் இறுதிப்போட்டி உலக கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்