Fifa world cup 2022: போராடிய மொராக்கோ! மூன்றாவது இடம் பிடித்த குரோஷியா
உலகக் கோப்பை கால்பந்து போட்டி மூன்றாவது இடத்துக்காக நடைபெற்ற குரோஷியா - மொராக்கோ இடையிலான பரபரப்பான ஆட்டத்தில் குரோஷியா வெற்றி பெற்றது.
கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான பிரான்ஸ் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்கவுள்ளது.
அதேபோல், 36 ஆண்டுகளுக்கு பிறகு நட்சத்திர வீரர் லியோனஸ் மெஸ்ஸி தலைமையில் கோப்பை வெல்லும் வாய்ப்பு அர்ஜெண்டினா அணிக்கு உருவாகியுள்ளது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக மூன்றாவது இடத்தை பெறும் அணிகளுக்கான போட்டி குரோஷியா - மொராக்கோ இடையே நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் குரேஷியா அணி வீரர் ஜோஸ்கோ வார்டியோல் தனது அணிக்கு முதல் கோல் அடித்தார். இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த மொராக்கோ வீரர் அஷ்ரப் டேரி ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் தனது அணிக்காக கோல் அடித்தார்.
இதனால் 1-1 என ஆட்டம் சமநிலை அடைந்தது. பின்னர் ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் குரோஷியா வீரர் மிஸ்லாவ் ஓர்சிக் தனது அணிக்கு இரண்டாவது கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியிலேயே குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடிய நிலையில் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் முழு ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தது.
கடந்த முறை ரன்னர் அப் கோப்பையை வென்ற குரோஷியா இந்த முறை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற மொராக்கோ அணி சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
டாபிக்ஸ்