CWC 2023: இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நாள்! மருத்துவனை ரூம் புக்கிங்கில் ரசிகர்கள் படையெடுப்பு! ஏன் தெரியுமா?
உலக கோப்பை ஒரு நாள் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாளில் ஒட்டல் கட்டணம் பல மடங்காக உயர்ந்த நிலையில், ரசிகர்கள் பலரும் ஒரு நாள் நோயாளிகளாக மாறி மருத்துவமனை ரூம்களை புக் செய்வதில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் உலகமே உற்று எதிர்நோக்கும் போட்டியாக இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
இதையடுத்து உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியான நாளில் இருந்தே அகமதாபாத்தில் உள்ள ஒட்டல் ரூம்களில் புக்கிங்கும் ஜரூராக நடைபெற்றது. வழக்கமாக ரூ. 5 ஆயிரம் வரை இருக்கும் ரூம்களின் வாடகை அந்த நாளில் மட்டும் ரூ. 40 ஆயிரம் வரை என பல மடங்கு உயர்ந்தது.
அத்துடன் சில ஒட்டல்களில் அந்த நாளில் தங்குவதற்கு மட்டும் அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை வாடகை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. தற்போதயை நிலைப்படி அகமதாபாத்தில் உள்ள ஒட்டல்கள் அனைத்திலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை கணக்கில் வைத்து அதற்கு முந்தைய நாள் அல்லது போட்டி நடைபெறும் நாளில் ரூம்கள் காலியாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஒட்டல்களிலும் இதேநிலை இருந்து வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் மாற்றி யோசனையில் இறங்கியுள்ளனர்.
அதாவது போட்டி நடைபெறும் நாள் அல்லது அதற்கு முந்தைய நாளில் மைதானத்தை ஒட்டி அமைந்திருக்கும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் தங்குவதற்கான படுக்கை கட்டணம் குறித்து தகவல்களை பெற்று வருதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக முழு உடல் பரிசோதனை வைத்திருக்கும் மருத்துவமனைகளில் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை தங்குவதற்கான கட்டணம் குறித்து பலரும் விசாரித்து வருகிறார்களாம்.
மருத்துவமனையை அணுகியவர்கள் அங்கிருக்கும் அனைத்து வகை ரூம்களிலும் தங்குவது குறித்து தகவல்கள் பெற்று வருகிறார்களாம்.
பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் இந்த மாற்று யோசனையில் இறங்கியிருக்கும் பலர், அப்படியே உடல்நிலை பரிசோதனையும் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, நோயாளிகளின் நலன் தான் முக்கியம் எனவும், இதுபோன்று வரும் விசாரணைகள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மருத்துவமனை நிர்வாகங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்