Euro 2024: பெனால்டி ஷூட்அவுட்டில் போர்ச்சுகல் அணியை வீழ்த்திய பிரான்ஸ்! தோல்வியுடன் முடிவுற்ற ரொனால்டோ அத்தியாயம்?
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்ற யுரோ 2024 கால்பந்து தொடர் காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை பெனால்டி ஷூட்அவுட்டில் வீழ்த்திய பிரான்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஸ்பெயின் அணியை அரையிறுதியில் எதிர்கொள்ள இருக்கிறது.

யூரோ 2024 கால்பந்து தொடரின் நாக்அவுட் போட்டிகள் முடிவுற்று காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தொடரை நடத்தும் ஜெர்மனி அணியை வீழ்த்திய ஸ்பெயின் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது காலிறுதி ஆட்டம் போர்ச்சுகல் - பிரான்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் முழு ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் கூடுதல் நேரத்திலும் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்க தவறின.
பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி
இதன் பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்கும் விதமாக பெனால்டி ஷூட் அவுட் நடைபெற்றது. இதில் 5-3 என்ற கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம் யூரோ சாம்பியன்ஷிப்பில் ஆறாவது முறையாக அரையிறுதி விளையாடும் அணி என்ற பெருமை பெற்றது. 2021 யூரோ சாம்பியன்ஷிப் நாக்அவுட் தோல்வி, 2022 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்விக்கு பின்னர் கைலியன் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணி பெரிய தொடரில் முக்கிய வெற்றியை பெற்றுள்ளது.