Eng vs Aus: இரண்டாவது நாளில் கிளாசிக் டெஸ்ட் ஆட்டம் - சதமடித்து ஆஸி.,யை கரை சேர்த்து வரும் கவாஜா
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Eng Vs Aus: இரண்டாவது நாளில் கிளாசிக் டெஸ்ட் ஆட்டம் - சதமடித்து ஆஸி.,யை கரை சேர்த்து வரும் கவாஜா

Eng vs Aus: இரண்டாவது நாளில் கிளாசிக் டெஸ்ட் ஆட்டம் - சதமடித்து ஆஸி.,யை கரை சேர்த்து வரும் கவாஜா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 17, 2023 11:58 PM IST

இங்கிலாந்து அணி 7 பவுலர்களை பயன்படுத்தியபோதிலும் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் கிளாசிக்கான டெஸ்ட் ஆட்டம் போல் விளையாடினர். விக்கெட் சரிவை தடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா கைவசம் 5 விக்கெட்டுகள் இருக்க 82 ரன்கள் பின்தங்கி உள்ளது.

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் அலெக்ஸ் கேரி - உஸ்மான் கவாஜா
ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் அலெக்ஸ் கேரி - உஸ்மான் கவாஜா (AP)

ஆனால் ஆஸ்திரேலியா பவுலர்களை நாலபுறமும் அடித்து ரன்வேட்டையில் ஈடுபட்ட இங்கிலாந்து முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடிக்கும் 30வது சதமாக அமைந்தது. கடைசி வரை ரூட் அவுட்டாகாமல் இருக்கு முதல் நாளிலேயே சுமார் 10 ஓவர்கள் எஞ்சியிருக்கும் நிலையில் 8 விக்கெட் இழப்புக்கு 393 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸில் 78 ஓவர்கள் வீசிய ஆஸ்திரேலியா பவுலர்கள் வெறும் 2 மெய்டன்கள் மட்டும் வீசும் அளவுக்கு இங்கிலாந்தின் பேட்டிங் அதிரடியாக இருந்தது. ஆஸ்திரேலியா பவுலர்களில் ஸ்பின்னரான லயன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் நாளிலேயே தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர் இங்கிலாந்து பவுலர்கள். வார்னர் 9 ரன்கள் ஸ்டுவர்ட் பிராட் பந்தில் அவுட்டானார். இதற்கு அடுத்து பேட் செய்ய வந்த லபுஸ்சேன் முதல் பந்திலேயே அவுட்டாகி நடையை கட்டினார். அடுத்தடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியா அணியை சரிவிலிருந்து ஓபனிங் பேட்ஸ்மேன் கவாஜா - ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் மீட்டனர்.

இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஸ்மித் 16 ரன்களில், ஸ்டோக்ஸ் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அணியின் ஸ்கோர் அப்போடு 67 என இருந்தது. இதன் பின்னர் ஹெட் - கவாஜா இணைந்து நிதானமாக பேட் செய்து அணியின் ஸ்கோர் உயர்த்தினர். இவர்கள் இரண்டு பேரும் அரைசதத்தை பூர்த்தி செய்து விளையாடினர்.

ஹெட் 50 ரன்கள் அடித்த பிறகு மொயின் அலி பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக வந்த க்ரீனும் நிதனாமாக பேட் செய்து 38 ரன்கள் அடித்து, அலி பந்தில் அவுட்டானார்.

இதற்கிடையே ஆஸ்திரேலியாவை சரிவிலிருந்து மீட்டதில் முக்கிய பங்கு வகித்த கவாஜா சதமடித்தார். இது இங்கிலாந்தில் கவாஜா அடிக்கும் முதல் சதமாகும். அவருடன் இணைந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரியும் சிறப்பாக பேட் செய்து அரைசதம் அடித்தார்.

ஆட்டத்தின் 80.1வது ஓவரில் பிராட் பந்து வீச, சதமடித்து 112 ரன்களில் இருந்த கவாஜா கிளீன் போல்டு ஆனார். பின்னர் அந்த பந்து ரிவியூ செய்யப்பட்ட நிலையில் நோபால் என அறிவிக்கப்பட்டது. இதனால் கவாஜா தப்பித்தார். இதன் பின்னர் அவர் கூடுதலாக 14 ரன்கள் அடித்துள்ளார்.

இதையடுத்து இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியா 82 ரன்கள் பின் தங்கியுள்ளது. கவாஜா 126, கேரி 52 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இரண்டாம் நாள் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும் பின்னர் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் கிளாசிக்கான டெஸ்ட் போட்டியை விளையாடினர். இங்கிலாந்து அணி 7 பவுலர்களை பயன்படுத்தியும் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியாமல் போய்யுள்ளது.

இன்னும் மூன்று நாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா அணி தற்போது இங்கிலாந்தை விட வலுவான நிலையிலேயே உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.