Squash World Cup 2023: உலகக்கோப்பை ஸ்குவாஷ்! எகிப்து அணிக்கு கோப்பை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Squash World Cup 2023: உலகக்கோப்பை ஸ்குவாஷ்! எகிப்து அணிக்கு கோப்பை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

Squash World Cup 2023: உலகக்கோப்பை ஸ்குவாஷ்! எகிப்து அணிக்கு கோப்பை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

Kathiravan V HT Tamil
Jun 17, 2023 08:11 PM IST

சென்னையில் கட்நத 13.06.2023 முதல் 17.06.2023 வரை நடைபெற்ற போட்டியில், இந்தியா, ஹாங்காங் - சீனா, ஜப்பான், மலேசியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கொலம்பியா ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த 32 தலைசிறந்த ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்றனர்.

உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளை பாராட்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளை பாராட்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சர்வதேச ஸ்குவாஷ் போட்டி 2023-ல் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல கோப்பைகளை வென்ற அணிகளின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் பதக்கங்கள் அணிவித்து வாழ்த்தினார்.

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. மேலும், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை அனைவரும் பாராட்டும் வகையில் தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்தியது, மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை  பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று ஏற்படுத்திட “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை” உருவாக்கியது, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில், சர்வதேச ஸ்குவாஷ் போட்டி – 2023 சிறப்பாக நடத்திடும் வகையில் தமிழ்நாடு அரசால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் 12.06.2023 அன்று நடைபெற்ற தொடக்க விழாவில்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் போட்டிகளை தொடங்கி வைத்தார். 

இச்சர்வதேச ஸ்குவாஷ் போட்டி 13.06.2023 முதல் 17.06.2023 வரை நடைபெற்றது.   இந்தப் போட்டியில், இந்தியா, ஹாங்காங் - சீனா, ஜப்பான், மலேசியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கொலம்பியா ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த 32 தலைசிறந்த ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்றனர். இந்திய அணியில் ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கன்னா சவுரவ் கோசல் மற்றும் அபய் சிங் ஆகிய முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியானது 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடத்தப்படுவது சிறப்புக்குரியது. 

இந்தப் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக 2 கோடி ரூபாய் நிதி தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் அசோசியேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

2023 சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் முதல் இடம் வென்ற  எகிப்து  அணிக்கு சாம்பியன்ஷிப் தங்க கோப்பையும், பரிசுத் தொகையாக 10,000 அமெரிக்க டாலர்களும் (ரூ.8.20 இலட்சம்), இரண்டாம் இடத்தை வென்ற மலேசியா  அணிக்கு வெள்ளி கோப்பையும், பரிசுத் தொகையாக 8,000 அமெரிக்க டாலர்களும் (ரூ.6.56 இலட்சம்), மூன்றாம் இடத்தை வென்ற இந்திய மற்றும் ஜப்பான் அணிகளுக்கு வெண்கல கோப்பைகளையும், பரிசுத் தொகையாக ஒவ்வொரு அணிக்கும் 6,000 அமெரிக்க டாலர்களும் (ரூ.4.92 இலட்சம்) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.