Muhammad Ali Memorial Day: முகமது அலி குத்துச்சண்டை வீரராக உருவெடுக்க காரணமாக அமைந்த சம்பவம் என்ன தெரியுமா?
Boxing: குத்துச்சண்டை போட்டி நடைபெறும் ரிங் மட்டுமல்ல, அதற்கு வெளியிலும் போராட்ட குணம் கொண்ட முகமது அலியின் வாழ்க்கை நமக்கு பல படிப்பினைகளைக் கற்றுத் தருகிறது.
முகமது அலி. உலகம் அறிந்த அமெரிக்க குத்துச்சண்டை வீரர். இவரது நினைவு நாள் (ஜூன் 3) இன்று.
காசியஸ் கிலே என்ற இயற்பெயரை கொண்ட முகமது அலியின் வாழ்க்கை வரலாறு அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். குறிப்பாக குத்துச்சண்டை வீரர்களாக விரும்புபவர்கள் முகமது அலியின் வாழ்க்கையை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
குத்துச்சண்டை முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியன் சோனி லிஸ்டனை வீழ்த்தி அமெரிக்காவின் இரண்டவாது இளம் வயது ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம் பெறுகிறார் காஸியஸ் கிலே (அமெரிக்காவின் முதல் இளம் சாம்பியன் ஃபிளாய்டு பாட்டர்சன்).
இந்த வெற்றிக்கு பிறகு ‘தானே மிகவும் சிறந்தவன் (I AM THE GREATEST)’ என்று கம்பீரமாக அறிவித்தார் காசியஸ் கிலே. அப்போது அவருக்கு வயது வெறும் 22.
மனித உரிமை ஆர்வலர் மால்கம் எக்ஸ் உடன் நட்பு பாராட்டிவந்த முகமது அலி, ‘நேஷன் ஆஃப் இஸ்லாம்’ அமைப்பில் சேர்கிறார். அதன்பிறகு, முகமது அலி என தனது பெயரை மாற்றிக் கொண்டார். அமெரிக்காவில் நீண்ட காலமாகவே கறுப்பினத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நிகழ்ந்து வந்தன.
அதை குத்துச்சண்டை போட்டிகளில் பெற்ற வெற்றி மூலம் மாற்றிக் காட்டினார் கறுப்பினத்தவரான அலி. அதன் பிறகு, அவருக்கு பெயரும், புகழும், செல்வாக்கும் கூடியது.
கறுப்பினத்தவர்களின் கதாநாயகனாக உருவெடுத்தார். இந்த சூழ்நிலையில், 1967-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அவரை வியட்நாம் போரில் பங்கெடுக்கச் செய்ய அமெரிக்க ராணுவம் முயற்சி செய்கிறது.
ஆனால், தனது மத நம்பிக்கைகளுக்கு மாறாக தன்னால் போரில் ஈடுபட முடியாது என்று தைரியத்துடன் மறுத்து விடுகிறார் அலி. ராணுவத்தின் எச்சரிக்கைக்கு பிறகும் அவர் போரில் ஈடுபட மறுப்பு தெரிவித்ததை அடுத்து, போலீஸாரால் கைது செய்யப்படுகிறார். நியூயார்க் தடகள ஆணையம், அவரது ஹெவிவெயிட் பட்டத்தையும், குத்துச்சண்டையில் பங்கேற்பதற்கான உரிமத்தையும் ரத்து செய்து விடுகிறது.
5 ஆண்டு சிறைத் தண்டனையும், 10,000 அமெரிக்க டாலர்களும் அலிக்கு அபராதமாக விதிக்கப்படுகிறது. இதை எதிர்த்து அலி தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் அவர் சிறை வாசம் அனுபவிக்கவில்லை.
தடை காரணமாக அடுத்த 3 ஆண்டுகள் அவரால் சொந்த நாட்டிலும், வெளிநாடுகளிலும் எந்தவொரு குத்துச்சண்டை போட்டியிலும் பங்கேற்க முடியவில்லை.
1970-இல் அமெரிக்க உச்சநீதிமன்றம் அவருக்கு எதிரான தடையை ரத்து செய்து உத்தரவிடுகிறது.
அதைத் தொடர்ந்து, 1974-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி காங்கோவின் கின்ஷாஸாவில் உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் சக நாட்டவரான ஜார்ஜ் ஃபோர்மேனை எதிர்கொள்கிறார் அலி.
புதுவித யுக்தியைப் பயன்படுத்தி ஜார்ஜ் ஃபோர்மேனை 8-ஆவது சுற்றில் நாக் அவுட் மூலம் வீழ்த்துகிறார் அலி. மீண்டும் ஹெவிவெயிட் சாம்பியன் ஆகிறார்.
குத்துச்சண்டை போட்டி நடைபெறும் ரிங் மட்டுமல்ல, அதற்கு வெளியிலும் போராட்ட குணம் கொண்ட முகமது அலியின் வாழ்க்கை நமக்கு பல படிப்பினைகளைக் கற்றுத் தருகிறது.
குத்துச்சண்டையில் 3 முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம் வென்ற முகமது அலி, மொத்தம் 61 போட்டிகளில் பங்கேற்று, அதில் 56 வெற்றிகளையும், 5 தோல்விகளையும் கண்டிருக்கிறார். 37 தடவை ‘நாக்அவுட்’ முறையில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறப்பு
அமெரிக்காவின் கென்டக்சி மாகாணத்தில் 1942-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி பிறந்த முகமது அலி, 1960 ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் தங்கம் வென்றிருக்கிறார்.
இவர் குத்துச்சண்டை வீரராக உருவெடுத்ததற்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதை உண்டு.
இளம் வயதில் அலியின் மிதிவண்டியை யாரோ திருடிவிட, காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். ‘திருடன் மட்டும் கிடைத்தால் அவன் முகத்தில் ஓங்கி குத்துவிடுவேன்’ என்று கோபத்துடன் கூறிய அலிக்கு, அந்தக் காவல்துறை அதிகாரி, ‘சண்டைபோட முதலில் முறைப்படி நீ பயிற்சி எடுக்க வேண்டும்’ என்று ஆலோசனை வழங்குகிறார்.
அதன்பிறகே குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுகிறார் அலி.
மாபெரும் குத்துச்சண்டை வீரராகவும் பின்னாளில் உருவெடுத்தார் என்பது உலகம் அறிந்த செய்தி.
2016-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி காலமான முகமது அலி, உலகம் முழுவதும் பலருக்கு ஆதர்ச நாயகனாக மாறியிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.
டாபிக்ஸ்