WTC Final போட்டியில் வெல்லும் அணிக்கு எத்தனை கோடி பரிசுத் தொகை தெரியுமா?
Ind vs Aus: 4வது இடத்தைப் பெற்ற அணிக்கு ரூ.2 3/4 கோடியும், 5வது இடத்தைப் பிடித்த அணிக்கு ரூ.1 1/2 கோடியும் வழங்கப்படவுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இன்று (ஜூன் 7) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் நியூசிலாந்து இந்த முறை ஃபைனலுக்கு முன்னேறவில்லை. ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் இந்த முறை ஃபைனலில் மோதுகிறது.
இந்தப் போட்டியில் ஜெயிக்கும் அணிக்கு ரூ.13 1/4 கோடியும், 2வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.6 1/2 கோடி கிடைக்கும்.
புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்த அணிக்கு ரூ.3 3/4 கோடி பரிசுத்தொகையாக அளிக்கப்படவுள்ளது.
4வது இடத்தைப் பெற்ற அணிக்கு ரூ.2 3/4 கோடியும், 5வது இடத்தைப் பிடித்த அணிக்கு ரூ.1 1/2 கோடியும் வழங்கப்படவுள்ளது.
இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு ஃபைனல் போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட் நேரலையில் இப்போட்டியை ஒளிபரப்புகிறது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் அனல் பரக்கும் என எதிர்பார்க்கலாம். 140 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூன் மாதத்தில் நடப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் போட்டிக்காக இந்திய அணியினர் கடந்த ஒரு வார காலமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸி., வீரர்களும் பயிற்சியில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
டெஸ்ட் டீமை பொருத்தவரை இந்திய அணி நம்பர் 1 இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 2 ஆட்டங்களில் வென்று ஆதிக்கம் செலுத்தியது. அஸ்வினும், ஜடேஜாவும் இணைந்து 47 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இங்கிலாந்தில் கடந்த 2021-22-இல் இந்திய அணி விளையாடியபோது கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் 368 ரன்களை விளாசினார்.
கே.எல்.ராகுல் 315 ரன்களை குவித்திருந்தார். தற்போது ராகுல் காயம் காரணமாக இந்தப் போட்டியில் இல்லாத நிலையில், சுப்மன் கில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கவுள்ளார்.
முகமது ஷமியைப் பொருத்தவரை இங்கிலாந்தில் 13 டெஸ்ட்களில் விளையாடி 38 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். சிராஜ், இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட்களில் விளையாடி 18 விக்கெட்டுகளை அள்ளியிருக்கிறார். இதுதவிர, ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் உள்ளனர்.
டாபிக்ஸ்