TNPL: வெளியேறியது சேலம்.. குவாலிஃபையர் 1 இல் கோவையை சந்திக்கிறது திண்டுக்கல்
திண்டுக்கல் அணி கேப்டன் பாபா இந்திரஜித் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார்.
சன்னி சந்துவின் அசத்தலான ஆட்டத்தால் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 160 ரன்களை எட்டியது. திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாபா இந்திரஜித் 50 பந்துகளில் 83 ரன்கள் விளாசி அசத்தினார்.
இந்த சீஸனின் ப்ளே-ஆஃப்ஸிற்கு தகுதி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் இந்தப் போட்டியில் வென்றதால் டாப் 2 இடங்களுக்குள் வருவதோடு குவாலிஃபையர் 1இல் லைகா கோவை கிங்ஸ் அணியுடன் மோதும். மறுபுறம் இந்த சீஸனின் ப்ளே-ஆஃப்ஸ் பந்தயத்தில் நீடிக்க கண்டிப்பாக சேலம் ஸ்பார்ட்டன்ஸிற்கு இந்த வெற்றி அவசியமாக இருந்தது. ஆனால், அந்த அணி தோற்றதால் இந்த தொடரிலிருந்து சேலம் ஸ்பார்ட்டன்ஸ் வெளியேறிவிட்டது.
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் 26வது போட்டியில் சன்னி சந்துவின் அதிரடியான ஆட்டத்தால் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 20 ஓவர்களில் 160 ரன்களை அடித்தது.
முன்னதாக, டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களான கெளஷிக் காந்தி (7) மற்றும் எஸ் அர்விந்த்(26) ஆகிய இருவருமே இந்திய சுழல் ஜாம்பவான் வருண் சக்கரவர்த்தியின் சுழலில் சிக்கி தங்களது விக்கெட்களை இழந்தனர்.
மூன்றாவது வீரராக பேட் செய்த ஆர் கவனின் அதிரடியாக விளையாடி வெறும் 9 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து பவர்ப்ளேவில் சேலம் ஸ்பார்ட்டன்ஸின் ஸ்கோரை சட்டென்று உயர்த்தினார்.
சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 75 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் 4வது விக்கெட்டிற்கு சன்னி சந்து மற்றும் மோகித் ஹரிஹரன் இணைந்து அந்த அணிக்காக 63 ரன்களை சேர்த்து இந்த சீஸனில் சேலம் ஸ்பார்ட்டன்ஸிற்காக அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். சன்னி சந்து மிகச்சிறப்பாக விளையாடி இந்த சீஸனில் தொடர்ச்சியாக தனது 2வது அரைசதத்தைப் பதிவு செய்தார். மேலும் தனது இன்னிங்ஸில் 4 பிரம்மாண்ட சிக்ஸர்கள் உட்பட வெறும் 39 பந்துகளில் 57 ரன்களைக் குவித்தார்.
சிறப்பாக பேட் செய்து நல்ல ஸ்கோரை நோக்கி சென்று கொண்டிருந்த சேலம் ஸ்பார்ட்டன்ஸிற்கு தடுப்பணையாக திண்டுக்கல் டிராகன்ஸின் சுபோத் குமார் பாட்டீ செயல்பட்டார். 18வது ஓவரை வீசிய அவர் அந்த ஒரே ஓவரில் நன்றாக விளையாடி வந்த மோகித் ஹரிஹரன்(21) மற்றும் சன்னி சந்து(57) விக்கெட்களை கைப்பற்றி அவர்களின் ரன் வேகத்தைக் குறைத்தார். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டும் சேலத்தின் கேப்டன் அபிஷேக் தன்வார் 1 ரன்னில் ஜி கிஷோரின் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.
முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் அத்நான் கானின் ஒரு சிக்ஸர் அடிக்க இறுதியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சன்னி சந்து 39 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். திண்டுக்கல் டிராகன்ஸின் பெளலிங்கைப் பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி மற்றும் சுபோத் பாட்டீ தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய திண்டுக்கல் அணி, சிறப்பாக விளையாடி இலக்கை எட்டியது.
அந்த அணியின் தொடக்க வீரர் விமல் 42 ரன்களையும், கேப்டன் பாபா இந்திரஜித் 83 ரன்களையும் விளாசினர்.
டாபிக்ஸ்