TNPL Qualifier 2: ஷிவம் சிங் அதிரடி அரை சதம்-நெல்லைக்கு 186 ரன்கள் இலக்கு
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை விளையாடவுள்ளது.
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனின் குவாலிஃபையர் 2ல் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மோதின.
நெல்லை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை விளையாடவுள்ளது.
முன்னதாக, இந்த சீஸனின் குவாலிஃபையர் 1ல் தோற்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் எலிமினேட்டரில் பரபரப்பான வெற்றியைப் பெற்று நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் குவாலிஃபையர் 2ல் விளையாட திருநெல்வேலிக்கு வந்திறங்கினர்.
இதில், டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் விமல் குமார் 16 ரன்களுக்கு தனது விக்கெட்டை நெல்லையின் சோனு யாதவிடம் இழந்தார்.
அதன் பின், 2வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் ஷிவம் சிங் மற்றும் பூபதி குமார் இணைந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 81 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடி வந்த பூபதி குமார் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து சந்தீப் வாரியரின் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
மற்றொரு புறம் ஷிவம் சிங் இந்த சீஸனில் தனது 4வது அரை சதத்தை அதிரடியாக பூர்த்தி செய்தார். ஷிவம் சிங் தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரிகளையும் 6 சிக்ஸர்களையும் பறக்க விட்டு நெல்லை ராயல் கிங்ஸின் பந்துவீச்சாளர்களை அச்சுறுத்த, அவரின் விக்கெட்டை வீழ்த்த வழிதெரியாமல் நெல்லையின் பெளலர்கள் திணறினர்.
ஒரு வழியாக லக்ஷய் ஜெயின் விரித்த வலையில் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஷிவம் சிங் (76 ரன்கள் 46 பந்துகள்) ஆட்டமிழக்க, அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஆதித்யா கணேஷும்(13) தனது விக்கெட்டை பொய்யாமொழியிடம் பறிகொடுத்தார்.
அடுத்தடுத்து 2 முக்கிய விக்கெட்களை இழந்த திண்டுக்கல் டிராகன்ஸ் தங்களின் அதிரடி வீரர் சரத் குமாரின்(9) விக்கெட்டையும் சோனு யாதவின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சில் பறிகொடுத்தனர்.
மிகப்பெரிய ஸ்கோரை எதிர்நோக்கி சென்றுகொண்டிருந்த திண்டுக்கல் அணிக்கு நெல்லை பந்துவீச்சாளர்கள் இறுதிக்கட்டத்தில் தடையாக இருந்தனர்.
இறுதி ஓவரில் திண்டுக்கல் டிராகன்ஸின் கேப்டன் பாபா இந்திரஜித்தின்(13* ரன்கள் 5 பந்துகள்) முயற்சியால் அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 185 ரன்களைக் குவித்தது. திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக ஷிவம் சிங் 46 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார்.
நெல்லை ராயல் கிங்ஸ் சார்பில் அதிகபட்சமாக சோனு யாதவ் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். நெல்லை ராயல் கிங்ஸ் இந்தப் போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்குள் செல்ல அந்த அணிக்கு 20 ஓவர்களில் 186 ரன்கள் தேவை.
டாபிக்ஸ்