Dindigul vs Chepauk: HeartBeatஐ எகிற வைத்த சிஎஸ்ஜி! கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற திண்டுக்கல்
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை, 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 10 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் சேப்பாக் அணியை முதல் முறையாக வீழ்த்தியுள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. இந்த சீசனில் ஹார்ட் பீட்டை எகிற வைத்த பரபரப்பு மிகுந்த போட்டியாக இது அமைந்துள்ளது.
டிஎன்பிஎல் 2023 தொடரின் 11வது திண்டுக்கல் டிராகன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதுவரை ஒரு முறைகூட சேப்பாக் அணிக்கு எதிராக வெற்றி பெறாத திண்டுக்கல் அணி, இந்த முறை நல்ல பார்மில் இருந்து வரும் நிலையில் களமிறங்கியது.
திண்டுக்கல் என்பிஆர் காலேஜ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் திண்டுக்கல் அணி முதலில் பேட் செய்தது. அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் ராகுல் 20, ஷிவம் சிங் 21 ரன்கள் அடித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர்.
பின்னர் பேட் செய்ய வந்த பாபா இந்திரஜித், பூபதி குமார், அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
மிடில் ஆர்டரில் பேட் செய்த ஆதித்தியா கணேஷ் 44, சரத் குமார் 25 ரன்கள் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். கடைசி கட்டத்தில் பேட் செய்து அதிரடியாக பினிஷிங் கொடுத்த சுபோத் பாட்டி 13 பந்துகளில் 31 ரன்கள் விளாசிய நிலையில் திண்டுக்கல் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது.
சேப்பாக் அணியில் மொத்தம் 8 பவுலர்கள் பந்து வீசிய நிலையில், ராஹில் ஷா 3, ராமலிங்கம் ரோஹித் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 171 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சேப்பாக் கில்லிஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் சந்தோஷ் ஷிவ் 1, இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ராஜன் பால் 6 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர்.
அணி கேப்டன் ஜெகதீசன், பாபா அப்ரஜித் ஆகியோர் விக்கெட் சரிவை தடுத்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர். ஜெகதீசன் 37 ரன்களில் நடையை கட்டினார்.
இதைத்தொடர்ந்த அதிரடி மோடுக்கு மாறிய அப்ரஜித் சிக்ஸர்களாக பறக்கவிட்டு வானவேடிக்கை நிகழ்த்தினார். ஆனால் இவருக்கு கைகொடுக்கும் விதமாக யாரும் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் சேப்பாக் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
சிறப்பா பேட் செய்து வந்த அப்ரஜித், ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்த நிலையில், அடுத்த பந்தில் அவுட்டானார். 7 சிக்ஸர், 2 பவுண்டரிகளை அடித்த அவர் 40 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தது. சரவண குமார் வீசிய பரபரப்பு மிகுந்த அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் அடிக்கப்பட்டாலும், மூன்று விக்கெட்டுகளை எடுக்கப்பட்டன. கடைசி பந்தில் வெற்றிக்கு தேவைய 3 ரன்கள் என இருந்த நிலையில், இரண்டாவவது ரன் முயற்சியில் ராஹில் ஷா ரன்அவுட் ஆக்கப்பட்டார். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி த்ரில் வெற்றி பெற்றது.
இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி அற்புதமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதுவரை இந்த இரு அணிகளும் மோதிக்கொண்டதில் ஒரு முறை கூட வெற்றி பெறாத திண்டுக்கல் அணி, முதல் முறையாக தற்போது சேப்பாக் அணியை வீழ்த்தியுள்ளது.
அத்துடன் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றியை பிதிவு செய்து புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்