Ajith Agarkar: விதிமுறைகளை உடைத்த பிசிசிஐ! புதிய தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் செய்த சாதனைகள் என்ன?
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கரை தேர்வு செய்ததன் மூலம் பிசிசிஐ நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்த விதிமுறைகளை உடைத்துள்ளதாக கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்து வந்த சேத்தன் ஷர்மா பதவிக்கால கடந்த பிப்ரவரி மாதமே முடிவுற்றது. இதையடுத்து கடந்த நான்கு மாதங்களாக அந்த இடத்தை நிரப்புவதற்கான சரியான நபரை தேடி வந்தது பிசிசிஐ. இதற்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் எஸ்எஸ் தாஸ் இடைக்கால தலைவராக பதவி வகித்து வந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது இந்திய அணியின் புதிய தேர்வு குழு தலைவராக, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கரை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. 2007ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரில், சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்களில் ஒருவராக இருந்துள்ளார் அகர்கர்.
இந்தியாவுக்காக 191 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இவர் 288 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 58 விக்கெட்டுகளையும், 4 டி20 போட்டிகளில் 3 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
அகர்கர் பேட்டிங்கிலும் கணிசமான ரன்களை குவிக்கும் வீரராக இருந்துள்ளார். இவர் விளையாடிய காலகட்டத்தில் பவுலிங் ஆல்ரவுண்டர் போல் செயல்பட்ட இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமும், ஒரு நாள் கிரிக்கெட்டில் அரைசதமும் அடித்துள்ளார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் 1000 ரன்கள், 100 விக்கெட்டுகள், 50 கேட்சகளை பிடித்த வீரராகவும் இருந்துள்ளார். 23 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் அதிகவேக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை புரிந்த பவுலர்களில் மூன்றாவது இடத்தை பிடித்தார். அதேபோல் அதிக வேக அரைசதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையும் இவர் வசம் உள்ளது.
இந்தியாவின் மேற்கு மண்டலத்தை சேர்ந்தவராக அகர்கர் உள்ளார். தற்போது இந்திய அணி தேர்வு குழு உறுப்பினர்களாக இருந்து சுப்ரதோ பானர்ஜி மத்திய மண்டலத்தையும், எஸ் ஷரத் தென் மண்டலத்தையும், எஸ்எஸ் தாஸ் கிழக்கு மண்டலத்தையும், சாலில் அங்கோலா மேற்கு மண்டலத்தையும் சேர்ந்தவர்களாக உள்ளனர். எனவே வடக்கு மண்டலத்தை சேர்ந்த சேட்டன் ஷர்மா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக இன்னொரு வடக்கு மண்டல நபரைதான் தேர்வு செய்திருக்க வேண்டும். பிசிசிஐ காலங்காலமாக கடைப்பிடித்து வந்த இந்த விதிமுறையை உடைத்து மேற்கு மண்டலத்தை சேர்ந்த மற்றொருவரான அஜித் அகர்கரை தேர்வு குழுவின் தலைவராக நியமித்துள்ளது.
இந்த பதவிக்கு வடக்கு மண்டலத்தை சேர்ந்த பலரும் விண்ணப்பித்து இருந்த போதிலும், ஐந்து மண்டலங்களில் இருந்தும் ஒருவர் என்ற பழைய விதிமுறையை காற்றில் பறக்கவிட்டுள்ளது. இதுபற்றி கிரிக்கெட் உலகில் பல்வேறு குரல்களும் எழும்பியிருக்கும் நிலையில், பிசிசிஐ எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை எனவும், ஆர்.எம்.லோதா-கமிட்டி பரிந்துரைகளின்படி உருவாக்கப்பட்டம ண்டல அடிப்படையில் தேர்வாளர்கள் நியமனம் தொடர்பாக தனியொரு விதி எதுவும் இல்லை எனவும் இத்தனை ஆண்டுகளாக ஜனநாயக முறையில் இந்த தேர்வானது இருந்தது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வாளருக்கான விளம்பரத்தில் கூட மண்டலம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, மாறாக 30 முதல் தர அல்லது 10 ஒருநாள் போட்டிகள் விளையாடி இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் இத்தனை வருடங்கள் பொதுவான நடைமுறையை பின்பற்றி, மண்டல வாரியாக அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்வாளராக ஆகியிருக்கும் அகர்கரின் முதல் பணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்வதாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்