Shikhar Dhawan:தாய்க்கு மட்டும் குழந்தை மீது உரிமை இல்லை - ஷிகர் தவான் மகனை இந்தியாவுக்கு அழைத்து வர நீதிமன்றம் உத்தரவு
தாய்க்கு மட்டுமே குழந்தை மீது உரிமை இல்லை. தந்தையும் குழந்தையை பார்க்க அவர் அனுமதிக்க வேண்டும். எனவே ஷிகர் தவான் மகனை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என அவரது மனைவிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், ஆயிஷா முகர்ஜி என்பவரை 2012இல் திருமணம் செய்தார். மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆயிஷா முகர்ஜி, தவானை விட 12 வயது மூத்தவர். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் மகன் உள்ளனர்.
இதையடுத்து தவான் - ஆயிஷா முகர்ஜி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த நிலையில், விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆயிஷா முகர்ஜி தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவர்களது மகன் தற்போது ஆயிஷாவுடன் இருந்து வருகிறார்.
தவான் - ஆயிஷா ஆகிய இருவரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நீதிமன்றங்களில் விவாகரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தவானின் குடும்ப நிகழ்ச்சி ஜூன் 17ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்க ஆயிஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் குழந்தையை அழைத்து வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
தற்போது பள்ளி செல்லும் தனது மகனின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால், ஜூலை 1ஆம் தேதி பள்ளி விடுமுறை விடப்படும். அப்போது அழைத்து வருவதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன்பின்னர் அவருக்கு ஏற்ப குடும்ப நிகழ்ச்சியும் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், மீண்டும் மகனுடன் வருவதற்கு வேறு சில காரணங்களை சொல்லி ஆயிஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஷிகர் தவான் நீதிமன்றத்தை நாடினார். இதுதொடர்பாக டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் நீதிபதி ஹரிஷ் குமார், "இந்தியாவுக்கு தனது மகனை அழைத்து வர ஆட்சோபனை தெரிவித்த ஆயிஷா முகர்ஜியை கண்டித்தார்.
ஆகஸ்ட் 2020 முதல் அவரது மகனை இந்தியாவுக்கு அழைத்து வரவில்லை. இதனால் தவானின் பெற்றோர், பிற குடும்ப உறுப்பினர்கள் அவரது மகனை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே தனது மகன், தாத்தா, பாட்டியை சந்திக்க வேண்டும் என்கிற தவானின் கோரிக்கை நியாயமானது.
அவரது மகன் தவான் வீடு மற்றும் உறவினர்களுடன் பழகுவதை விரும்பாததற்கான காரணங்கள் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, தவானுடன் மகன் இருப்பதை விரும்பும்பட்சத்தில் ஆயிஷா ஏன் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கிறார் எனவும் கேள்வி எழுப்பினார்.
குழந்தை மீது தாய்க்கு மட்டும் தனியாக உரிமை இல்லை என்றும், தவானின் குடும்ப நிகழ்ச்சிக்கு ஒன்பது வயது மகனை இந்தியாவுக்கு அழைத்து வர ஆயிஷா முகர்ஜிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த முன்னாள் கிக்பாக்ஸரான ஆயிஷா முகர்ஜி, பிரிட்டீஷ் வம்சாவளியை சேர்ந்த இந்திய தந்தை மற்றும் தாய்க்கு பிறந்த ஆங்கிலோ-இந்தியன் ஆவார். ஆஸ்திரேலியாவுக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்த நிலையில், தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.
இதையடுத்து ஷிகர் தவானுடன், பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
டாபிக்ஸ்