CM MK Stalin: ஆசிய விளையாட்டில் சாதனை புரிந்த இந்திய வீரர்கள்.. வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்களை வென்று சாதனை புரிந்த இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹாங்சு நகரில் நடைபெற்ற 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம் 72 ஆண்டு கால ஆசிய விளையாட்டு வரலாற்றில், இந்தியா முதல்முறையாக 107 பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்களை வென்று சாதனை புரிந்த இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நமது வீரர்களுக்குச் சிறப்பு பாராட்டுகளை உரித்தாக்குகிறேன் என்றும் உங்களின் தனிச்சிறப்பான பங்களிப்பால் உலக அரங்கில் நமது மாநிலத்துக்குப் பெருமிதம் பொங்கச் செய்துள்ளீர்கள் என்றும் தமிழக முதல்வர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு எனது பாராட்டுகள்! 107 பதக்கங்களை அள்ளியதன் மூலமாக அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை நமது விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
தடகள சாம்பியன்கள், கூர்மிகு வில்வித்தையர்கள், சீற்றமிகு கபடி அணியினர், இறகுப்பந்து நட்சத்திரங்கள் என இந்தியாவின் பலதரப்பட்ட திறமையாளர்களும் பெரிதும் இத்தொடரில் மின்னியுள்ளனர்.
குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த நமது வீரர்களுக்குச் சிறப்பு பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். உங்களின் தனிச்சிறப்பான பங்களிப்பால் உலக அரங்கில் நமது மாநிலத்துக்குப் பெருமிதம் பொங்கச் செய்துள்ளீர்கள். இத்தகைய சிறப்பான பங்களிப்புடன் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களது முயற்சிகளும் சாதனைகளும் இங்கு இன்னும் பலரை ஊக்கப்படுத்தி வருகிறது. இந்திய அணி, வெகு சிறப்பு! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்