Chepauk Super Gillies: 'நாங்க கெத்து!' சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2வது வெற்றி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Chepauk Super Gillies: 'நாங்க கெத்து!' சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2வது வெற்றி

Chepauk Super Gillies: 'நாங்க கெத்து!' சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2வது வெற்றி

Manigandan K T HT Tamil
Jun 16, 2023 12:17 AM IST

இன்று நடந்த டிஎன்பிஎல் கிரிக்கில் சேப்பாக் அணியும், திருப்பூர் தமிழன்ஸும் மோதின.

வெற்றி மகிழ்ச்சியில் சேப்பாக் அணியினர்
வெற்றி மகிழ்ச்சியில் சேப்பாக் அணியினர் (@TNPremierLeague)

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.  20 ஓவர்களில்  120 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 15.4 ஓவர்களில் 121 ரன்கள் வெற்றி பெற்றது.                                      

சேப்பாக் சூப்பர் கில்லீஸின் சிறப்பான பெளலிங்கில் ரன் குவிக்க முடியாமல் திணறியது ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்.

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த சீஸனின் 5வது போட்டியில் சேப்பாக்  சூப்பர் கில்லீஸ் வெற்றி பெற 20 ஓவர்களில் 121 ரன்களை ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் நிர்ணயித்தது.

முன்னதாக, இந்த சீஸனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தங்களின் முதல் போட்டியில் பெற்ற வெற்றியுடன் இந்தப் போட்டிக்கு களமிறங்க மறுபக்கம் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் இந்த சீஸனில் தங்களின் முதல் வெற்றியை நோக்கி இன்று களம் கண்டது.

டாஸ் வென்ற ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய சேப்பாக சூப்பர் கில்லீஸின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களிடம் சிக்கி ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் டாப் ஆர்டர்கள் தடுமாறினர்.

ஓப்பனர் துஷார் ரஹேஜா வெறும் 2 ரன்களில் ஹரீஷ் குமாரிடம் ஆட்டமிழக்க மற்றொரு ஓப்பனர் என்.எஸ் சத்ருவேத் 8 ரன்களில் ராஹில் ஷாவின் சுழலில் சிக்கி பெவிலியன் திரும்பினார்.பவர்ப்ளேவிற்குள்ளாகவே அந்த அணி டாப் 3 பேட்டர்களின் விக்கெட்களையும் இழந்து வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸிற்காக 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த அனுபவ வீரர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும்  ஐபிஎல் நட்சத்திரம் விஜய் ஷங்கர் இணைந்து 58 ரன்கள் சேர்த்தனர். நிதானமாக விளையாடிய ராதாகிருஷ்ணன் (33 பந்துகள் 36 ரன்கள்) முக்கிய கட்டத்தில் தனது விக்கெட்டை ராஹில் ஷாவிடம் இழக்க, அந்த அணி ரன் குவிக்க முடியாமல் மிகவும் திணறியது. ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 15 ஓவர்களுக்கு வெறும் 82 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்களை இழந்திருந்தது.

இறுதிவரை ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸின் பேட்டர்களால் ஸ்கோர் குவிக்க முடியாமல் திணறியதோடு விஜய் ஷங்கராலும் (28 ரன்கள்) அணிக்கு பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆர் விவேக் மட்டும் இறுதி ஓவரில் நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடி 18 பந்துகளில் 26* ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நீடித்தார்.

இந்த சீஸனின் முதல் போட்டியில் வெறும் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் தங்களின் இரண்டாவது போட்டியிலும் பேட்டிங்கில் சோபிக்க முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தங்கள் இந்த தொடரின் ஆதிக்க மிகுந்த அணி என்பதை மீண்டுமொரு இந்தப் போட்டியில் நிரூபித்தது. கிட்டத்தட்ட 50 பந்துகளுக்கும் மேலான டாட் பந்துகளை ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸிற்கு எதிராக பதிவு செய்து அவர்களின் பின்னடைவிற்கு வழிவகுத்தது. அதோடு அவர்களின் பந்துவீச்சில் ஹரீஷ் குமார் மற்றும் ராஹில் ஷா தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இன்றைய முதல் இன்னிங்ஸில் ஃபீல்டிங்கின் போது சேப்பாக் சூப்பர் கில்லீஸின் மூத்த வீரர் ராஜகோபால் சதீஷிற்கு காயம் ஏற்பட அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸின் ஆர் விவேக் மற்றும் முகமது அலி அடுத்த ரன்னிற்கு முயற்சிக்காமல் போட்டியில் தங்களின் ஸ்பிரிட் ஆஃப் தி கேமை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.

முதல் இன்னிங்ஸிற்குப்பின் பேசிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸின் ராதாகிருஷ்ணன் பேசுகையில், “இந்த விக்கெட்டில் பெரிய ஸ்கோர் எடுக்க கடினமாக இருந்தது. சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே பெரிய ஸ்கோருக்கு முன்னெடுத்துச் செல்ல முடியுமென்று நினைத்தோம். ஆனால் எங்கள் பேட்டர்களால் அதை நிகழ்த்த முடியவில்லை. பவர்ப்ளேவில் சிறப்பாக பெளலிங் செய்து எதிரணியை வீழ்த்த முயற்சிப்போம்”, என்று தெரிவித்தார்.

அதிகபட்சமாக பாபா அபராஜித் 46 ரன்கள் விளாசினார். கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. பிரதோஷ் பால் 25 ரன்களிலும், என்.ஜெகதீசன் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இவ்வாறாக 15.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.