BCCI: அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்கும் இந்தியா - அட்டவணை அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்த கையொடு அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியது இந்திய அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்தியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதைத்தொடர்ந்து வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு டெஸ்ட், மூன்று ஒரு நாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்கிறது இந்திய அணி. இந்த தொடர் ஜூலை 12இல் தொடங்கி, ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது.
இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் தொடரை முடித்த கையோடு அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்தியா, அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. அதன்படி ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறவுள்ளது.
முதல் போட்டி ஆக்ஸ்ட் 18, இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 20, மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மூன்று போட்டிகளில் மலாஹிட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடும் டெஸ்ட், ஒரு நாள் அணிகளை கடந்த சில நாள்களுக்கு முன் பிசிசிஐ அறிவித்தது. அங்கு நடைபெற இருக்கும் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவிக்கவில்லை. எனவே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து தொடரை முடித்த பின்னர் இந்தியா அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், உலகக் கோப்பை ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் பங்கேற்கிறது.
முன்னதாக, கடந்த ஆண்டில் அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்