BANW vs INDW: காயத்துடன் போராடிய ஹர்மன்ப்ரீத் அரை சதம்: சேஸிங்கில் சரணடைந்த வங்கதேச மகளிர்
Harmanpreet Kaur: கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அரை சதம் விளாசினார். இது அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் 18வது அரை சதம் ஆகும்.
வங்கதேசத்தில் நடைபெற்றுவரும் அந்நாட்டு அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி அரைசதம் அடித்தார்.
இத்தொடர் ஐசிசி சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நடந்து வருகிறது. வங்கதேச மகளிர் டாஸ் ஜெயித்து பவுலிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 228 ரன்களை குவித்தது. இதையடுத்து விளையாடிய வங்கதேசம் 120 ரன்களில் சரணடைந்தது.
இதன்மூலம், 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் போட்டி சமநிலை வகிக்கிறது. முதல் ஆட்டத்தில் இந்திய மகளிரை முதல்முறையாக வங்கதேச மகளிர் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெமிமா ராட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி 86 ரன்கள் விளாசினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அரை சதம் விளாசினார். இது அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் 18வது அரை சதம் ஆகும்.
இரு முறை காயம் அடைந்தாலும் அவர் தொடர்ந்து விளையாடினார். இதனால், அணி ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எட்டியது.
இந்த ஆட்டத்தில் கவுர் 3 ஃபோர்ஸை விளாசினார். ராட்ரிக்ஸ் 9 ஃபோர்ஸை விரட்டினார்.
இருவருமே ஆட்டமிழந்தனர். ஸ்மிருதி மந்தனா 36 ரன்களும், ஹர்லீன் தியோல் 25 ரன்களும் அடித்தனர்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்கதேசம் தரப்பில் சுல்தானா கதுன், நஹிடா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
முன்னதாக, ஹர்மன்ப்ரீத் கவுர் களத்திற்கு வந்தபோது, இந்திய 2 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
ஸ்மிருதி மந்தனா மறுமுனையில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், நீண்ட நேரம் நிலைக்காமல் ஆட்டமிழந்தார்.
ரன் ரேட் குறைந்த வண்ணம் இருக்கையில், போராடும் குணத்தை கைவிடாத கவுர், விக்கெட்டை இழக்காமல் விளையாடினார்.
ஜெமிமா அவருக்கு தோள் கொடுத்தார்.
2009இல் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு களம் புகுந்த கவுர், இதுவரை 3,379 ரன்களை விளாசியிருக்கிறார். மொத்தம் 126 ஒரு நாள் ஆட்டங்களில் அவர் விளையாடியிருக்கிறார்.
இன்றைய அரை சதத்தையும் சேர்த்து 18 அரை சதங்களை ஒரு நாள் கிரிக்கெட்டில் பதிவு செய்திருக்கிறார்.
இது வங்கதேசத்திற்கு எதிரான 2 வது அரை சதம் ஆகும். ஒட்டுமொத்தமாக, முன்னாள் கேப்டன் மிதாலி ராஜுக்கு பிறகு இந்தியாவுக்காக ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ஸ்கோரை பதிவு செய்த 2வது வீராங்கனையானார் கவுர்.
சொந்த மண்ணில் 48 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கவுர், மொத்தம் 1,283 ரன்களை குவித்துள்ளார். அதில் 6 அரை சதங்களும், 2 சதங்களும் அடங்கும்.
50 ஒரு நாள் ஆட்டங்கள் அயல்நாட்டு மண்ணில் விளையாடியிருக்கிறார். அதில் மொத்தம் 1,367 ரன்களை பதிவு செய்திருக்கிறார். மொத்தம் 10 அரை சதங்கள், 1 சதம் அடங்கும்.
229 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் சரசரவென பறிகொடுத்து 35.1 ஓவர்களில் 120 ரன்களில் சரணடைந்தது.
ஜெமிமா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், தேவிகா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
ஒட்டுமொத்தமாக ஜெமிமா 2வது ஒரு நாள் ஆட்டத்தில் கலக்கியிருக்கிறார்.
டாபிக்ஸ்