INDW vs BANW: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை முதல் முறையாக வீழ்த்திய வங்காளதேசம்!
INDW vs BANW 1st ODI Highlights: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்திய மகளிர் அணியை வீழ்த்தியது வங்காளதேச அணி.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று (ஜூலை 16) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணிக்கு முர்ஷிதா கதூன் மற்றும் ஷர்மின் அக்தர் ஆகியோர் துவக்கம் தந்தனர். ஆனால், ஷர்மின் அக்தர் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டானார். முர்ஷிதா கதூன் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து, பர்கானா ஹக் 45 பந்துகளில் 27 ரன்களும், நிகர் சுல்தானா 64 பந்துகளில் 39 ரன்களும், ரித்து மோனி 8 ரன்களும், ரபேயா கான் 10 ரன்களும், நஹிடா அக்தர் 2 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். ஃபஹிமா கதூன் 12 ரன்களும், சுல்தானா கதூன் 16 ரன்களும், மருஃபா அக்தர் 6 ரன்களும் எடுத்தனர். ஷோர்னா அக்தர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், வங்காளதேச அணி 43 ஓவரில் 152 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. அதன்படி, 44 ஓவர்களுக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 35.5 ஓவரிலேயே 113 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட்டாகி தோல்வியடைந்தது. இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மகளிர் அணியை வீழ்த்தி வங்காளதேச மகளிர் அணி வெற்றிப் பெற்றது.
அதிகபட்சமாக தீப்தி சர்மா 20 ரன்களும், யாஸ்திகா பாட்டியா 15 ரன்களும் அமன்ஜோத் கவுர் 15 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வங்காளதேச அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்