Jonny Bairstow: அத்துமீறி மைதானத்தினுள் நுழைந்த நபர்! அலேக்காக தூக்கி சுமந்து வெளியேற்றிய பேர்ஸ்டோ - வைரல் விடியோ
இங்கிலாந்து போராட்ட குழுவை சேர்ந்த நபர் ஒருவர் ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்தினுள் ஆட்டம் நடைபெறும்போது அத்துமீறி நுழைந்து மைதானத்தை சேதப்படுத்த, அவரை பிடித்து அலேக்காக மைதானத்தின் வெளியே விட்டுள்ளார் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ.
கிரிக்கெட் விளையாட்டின் மெக்கா என கூறப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜூன் 28ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 383 ரன்கள் குவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் இந்த போட்டியின் தொடக்கத்தில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஆட்டத்தின் முதல் ஓவர் முடிந்த பிறகு, மைதனத்தினுள் திடீரென புகுந்த நபர் பீல்டர்களுக்கு இடையூறு செய்தார்.
அந்த நபரை பிடிப்பதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் அவரை நோக்கி ஓடினர். அப்போது இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்டோ பீல்டிங்குக்கு இடையூறு செய்த நபர் மடக்கி அலேக்காக தூக்கிவாறே தனது தோள்களில் சுமந்தவாறு சென்று மைதானத்தின் பவுண்டரி லைன் அருகே கீழே இறக்கினார். இதைக் கண்ட ரசிகர்கள் மைதானம் முழுவதும் கேட்கும் விதமாக கரகோஷம் எழுப்பி பேர்ஸ்டோவை பாராட்டினார்.
மைதானத்தில் இறங்கிய அந்த நபர் Just Stop Oil என்ற போராட்ட குழுவை சேர்ந்தவராக இருக்ககூடும் என கூறப்படுகிறது. இந்த குழுவினர் பிரிட்டீஷ் அரசாங்கம், "புதிய எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி திட்டங்களுக்கான அனைத்து உரிமங்களையும் ஒப்புதல்களையும் நிறுத்த வேண்டும்" என்று கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த கோரிக்கையை முன்னிறுத்தி அந்த நபரும் மைதானத்தில் இறங்கியருப்பார் என தெரிகிறது
இந்த நபர் செய்த களேபரத்தால் போட்டி சுமார் 10 நிமிடம் தாமதமானது. களத்தில் இறங்கிய நபர் ஆடுகள் அருகே ஆரஞ்சு நிற பெயண்டை தெளித்து விட்டு சென்றார். இதையடுத்து உடனடியாக மைதான பராமரிப்பாளர்கள் வந்து அந்த இடத்தை சரி செய்தனர்.
இதற்கிடையே பேர்ஸ்டோவும் உடனடியாக உடை மாற்று அ்றைக்கு சென்று, கறைபடிந்த தனது ஆடையை மாற்றிவிட்டு வந்தார். இந்த சம்பவத்தை பற்றி இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் வேடிக்கையான கருத்தை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், "இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு நல்ல தொடக்கம் அமைந்துள்ளது. பேர்ஸ்டோ ஏற்கனவே வெயிட் லிப்டிங் செய்துவிட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் புகழ் பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில், இதுபோன்று மைதானத்தில் களமிறங்கி இந்த குழுவினர் கவனத்தை ஈர்த்து ஆக்கிரமிப்பு செய்வது முதல் முறையல்ல. சமீப காலங்களில் நடைபெற்ற உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப், இங்கிலிஷ் ப்ரீயர்ஷிப் ரக்பி இறுதிப்போட்களிலும் இந்த Just Stop Oil போராட்ட குழுவினர் மைதானத்தில் இறங்கி இதுபோல் போராட்டம் செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்