Alan Davidson: ஒரே டெஸ்டில் 100 ரன்கள், 10 விக்கெட் எடுத்த முதல் வீரர்! கைவிரல் காயமடைந்த நிலையிலும் பவுலிங் செய்தவர்
வாசிம் அக்ரமுக்கு முன்னரே உலகமே வியந்து பார்த்த இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஆஸ்திரேலியா பவுலர் ஆலன் டேவிட்சன். இவர்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் முதல் முறையாக ரன்கள் அடித்து, 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை புரிந்தார்.
ஆஸ்திரேலியா அணியில் 1950 - 60 காலகட்டத்தில் அதிரடியான இடது கை பேட்டராகவும், இடது கை வேகபந்து வீச்சாளராகவும் இருந்து சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்தவர் ஆலன் டேவிட்சன். ஆறு அடி உயரத்தில் இருக்கும் டேவிட்சன் அந்த காலகட்டத்தில் சிக்ஸர்களை பறக்கவிடும் சிக்ஸர் மன்னனாக இருந்துள்ளார். அத்துடன் ஓபனிங் பவுலராக எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்ககூடியவராகவும் இருந்துள்ளார்.
பாகிஸ்தான் அணியில் 1990 காலகட்டத்தில் இருந்த வாசிம் அக்ரமுக்கு முன்னரே, லேட் ஸ்விங் செய்வதில் வல்லவராக இவர் திகழ்ந்தார். மிகுந்த கட்டுப்பாட்டுடன் பந்து வீசி பேட்ஸ்மேன்களை ஏமாற்றும் வித்தையை கையாண்ட இவர், தான் கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் 2 ரன்களுக்கு குறைவான எகானமி வைத்த சிறந்த பவுலராக திகழ்ந்தார்.
இதுமட்டுமில்லாமல் கேட்ச்களை தவறவிடாமல் பிடிப்பது, பவுண்டரி அருகே இருந்து துல்லியமாக பந்தை துரோ செய்வது என பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட டேவிட்சனை “The Claw” (பறவையின் வளைந்த நகம்) என்றே சக வீரர்கள் அழைத்தார்கள்.
ஒரே டெஸ்ட் போட்டியில் 100 ரன்களும், 10 விக்கெட்டும் வீழ்த்திய முதல் வீரர் என்ற அரிய சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார்.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடைபெற்றிருக்கும் சமனில் முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில், முதல் முறையாக சமன் ஆன போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்திருந்தார் டேவிட்சன். தனது அபார ஆல்ரவுண்ட் திறமையால் அணியை தோல்வி அடையாமல் இருக்க இவர் காரணமாக இருந்தார்.
இந்த போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் கேட்ச் பயிற்சியில் ஈடுபட்டபோது கைவிரலில் காயமடைந்தார் டேவிட்சன். பவுலிங் செய்யும் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டபோதிலும், துணிச்சலாக களமிறங்கிய டேவிட்சன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். பேட்டிங்கிலும் 44 ரன்கள் அடித்து சிறந்த பங்களிப்பை தந்தார்.
இதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை எடுத்த அவர், கடைசி நாளில் பேட் செய்து 233 ரன்கள் இலக்கை சேஸ் செய்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
ஆஸ்திரேலியா முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியபோதிலும் டேவிட்சன் ஒற்றை ஆளாக ரன்குவிப்பில் ஈடுபட்டு, 80 ரன்கள் அடித்து எதிர்பாராத விதமாக ரன்அவுட் ஆனார். இந்த போட்டியில்தான் ஆஸ்திரேலியா 232 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், போட்டி சமனில் முடிந்தது. இந்த போட்டியில் 100 ரன்களும், 10 விக்கெட்டும் எடுத்த வீரர் என்ற சாதனையை புரிந்தார் டேவிட்சன்.
ஆஸ்திரேலியா அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஆலன் டேவிட்சன், 1328 ரன்களும், 186 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை கடந்த முதல் வீரர், 1.97 என குறைவான எகானமி, 20.53 என சிறப்பான பவுலிங் சராசரி கொண்ட வீரர் என்ற பல சிறப்புகளை கொண்ட ஆலன் டேவிட்சனுக்கு 94வது பிறந்தநாள் இன்று.
டாபிக்ஸ்