WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் 3 போட்டிகள்! ரோஹித் கருத்தை ஆமோதித்த ஆஸி., ஸ்பின்னர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மூன்று ஆட்டங்கள் இருக்க வேண்டும் என்ற ரோஹித் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவளிக்கிறேன். அடுத்த சுழற்சியில் ஐசிசி புதிய முறை பின்பற்றுவது பற்றி ஆலோசிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு நாள்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வாகை சூடியது ஆஸ்திரேலியா. இதன் மூலம் அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் அணி என்ற பெருமையும் பெற்றது.
இந்த போட்டி முடிவுக்கு பின்னர் அளித்த பேட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, "இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து, ஒரேயொரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் என்பதே நிதானத்தை கடைப்பிடித்து பின்னர் திறமையை வெளிக்காட்டும் விளையாட்டாக உள்ளது. எனவே அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இறுதிப்போட்டியை முடிந்தால் 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்துவது சிறப்பாக இருக்கும்" என்றார்.
ரோஹித்தின் இந்த கருத்துக்கு ஆதரவை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஸ்பின்னரான பிராட் ஹாக். இதுகுறித்து அவர் கூறியதாவது: "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியாக 3 போட்டிகள் நடத்த வேண்டும் என்கிற ரோஹித்தின் கருத்துக்கு ஆதரவளிக்கிறேன்.
ஒரு ஆட்டத்தை முன்நோக்கி எடுத்து செல்வதில் தான் சிறப்பு உள்ளது. அந்த வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை நான்கு அணிகள் என இரண்டு டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு, டாப் 4 இடத்தை பிடித்த அணிகள் ஒரு டிவிஷனிலும், மீதமுள்ள அணிகள் மற்ற டிவிஷன்களிலும் இடம்பெற செய்ய வேண்டும்.
அதேபோல் அசோசியேட்ஸ் அணிகள் டிவிஷன் மூன்றில் இடம்பெற செய்து அவர்களும் முன்னோக்கி வருவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
இதில் முதல் டிவிஷனில் டாப் இடத்தை பிடித்திருக்கும் இரண்டு அணிகள், டாப் இடத்தை பிடித்திருக்கும் அணியின் சொந்த மண்ணில் மூன்று ஆட்டங்கள் கொண்ட இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும். முதல் டிவிஷனில் 3 மற்றும் 4வது ரேங்க் இடத்தை பிடித்திருக்கும் அணிகள், இரண்டாவது டிவிஷனில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிக்கு எதிராக விளையாட வேண்டும்.
இதன் பின்னர் டிவிஷன் ஒன்றில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணி டிவிஷன் இரண்டில் டாப் இடத்தை பிடிக்கும் அணிக்கு எதிராக உள்ளூர் மண்ணில் விளையாட வேண்டும். இதேபோன்ற முறையில் டிவிஷன் இரண்டு மற்றும் மூன்றில் உள்ள அணிகள் விளையாட வேண்டும்"
இவ்வாறு அவர் கூறினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு மூன்று போட்டிகள் என்ற ரோஹித் ஷர்மாவின் கருத்துக்கு பலரும் விமர்சித்து வந்த நிலையில், பிராட் ஹாக் ஆதரவை தெரிவித்ததோடு, புதிய முறையை பின்பற்றுவதற்கான யோசனையயும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடியுள்ளார் பிராட் ஹாக். மொத்தம் 140 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஹாக் 180 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்