HBD Shane Watson: ரத்தம் சொட்ட ஆடிய சிக்ஸர் மன்னன்! உலகையே கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆஸி., அணியின் கடைசி ஆல்ரவுண்டர்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Shane Watson: ரத்தம் சொட்ட ஆடிய சிக்ஸர் மன்னன்! உலகையே கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆஸி., அணியின் கடைசி ஆல்ரவுண்டர்

HBD Shane Watson: ரத்தம் சொட்ட ஆடிய சிக்ஸர் மன்னன்! உலகையே கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆஸி., அணியின் கடைசி ஆல்ரவுண்டர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 17, 2023 05:30 AM IST

வாட்சன் வந்துட்டான்டா என எந்த அணியை சேர்ந்த ஸ்டார் பவுலரையும் தனது அதிரடி பேட்டிங்கால் கலங்க வைத்தவர் வாட்சன். ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால் பவுலர்கள் கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் என்கிற ரீதியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகின் சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தார்.

உலக கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்த வாட்சன்
உலக கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்த வாட்சன்

அந்த வகையில் உலகத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆஸ்திரேலியா அணி என்ற வர்ணிக்கப்பட்ட காலகட்டத்தில் ஆல்ரவுண்டராக அறிமுகமாகி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என தனது அசத்தலான ஆட்டம் மூலம் முத்திரை பதித்தவர் ஷேன் வாட்சன்.

2002 முதல் 2016 வரை ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்தார். இந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலியா வென்ற 2003, 2007, 2015 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த வாட்சன், அணி சாம்பியனாக வாகை சூடுவதற்கு முக்கிய பங்களிப்பை அளித்தார். அத்துடன் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 2006, 2009 சாம்பியன்ஸ் டிராபியும் வென்றது. இந்த தொடரிலும் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றவராக வாட்சன் இருப்பதில் இருந்த புரியும் அவர் அணிக்காக அளித்திருக்கும் பங்களிப்பு.

பேட்டிங்கில் அதிரடியாலும், நீண்ட சிக்ஸர்களாலும் வானவேடிக்கை நிகழ்த்தக்கூடியவராக இருக்கும் வாட்சன், வேகப்பந்து வீச்சாளராக அணிக்கு தேவையான கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையும் தந்துள்ளார்.

வாட்சன் ராஜங்கம் செய்த இன்னிங்ஸ் என சொல்லும் அளவும் ஏரளாமான ஆட்டங்கள் இருந்தபோதிலும், வங்கதேசத்துக்கு எதிரான 2011இல் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 96 பந்துகளுக்கு 185 ரன்கள் விளாசினார். இது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் அடித்த தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. இதில் அதிக சிக்ஸர்கள், அதிவேக 150 ஸ்கோர், பவுண்டரிகளால் அதிக ரன்கள் அடித்த வீரர் என பல்வேறு சாதனைகளும் புரிந்தார். இந்த போட்டியில் 15 சிக்ஸர்கள் அடித்த வாட்சன் 150 ரன்களை பவுண்டரிகளால் மட்டுமே எடுத்தார்.

முதன் முதலாக 2002இல் தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமானார் வாட்சன். ஒரு நாள் போட்டிகளில் தனது ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் திறமையை வெளிப்படுத்திய அவர், 2005இல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

ஒரு நாள் போட்டிகள் போல் இல்லாமல் டெஸ்ட்டுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட அவர் நிதானமாக பேட் செய்து சதம் அடிக்கும் வித்தையும் வெளிக்காட்டினார். பேட்டிங்கை போல் பவுலிங்கிலும் முக்கிய தருணங்களில் விக்கெட் டேக்கிங் பவுலராக ஜொலித்தார்.

இதன் பின்னர் டி20 போட்டிகளின் நாயகனாக வலம் வந்தார். அவரது இயல்பான பாணி ஆட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும் டி20 போட்டிகளில் எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பணமாகவே இருந்தார். வாட்சன் வந்துட்டான்டா என்ற அச்சத்தை பவுலர்களுக்கு ஏற்படுத்தும் விதமாகவே இவரது ஆட்டம் அமைந்திருக்கும். இவரது விக்கெட்டை ஆரம்பத்திலேயே எடுக்காட்டவிட்டால் அவ்வளவுதான், எந்தவொரு கிளாஸ் பவுலராக இருந்தாலும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்.

2011 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் டி20 போட்டிகளில் சிறந்த ஆல்ரவுண்டர் லிஸ்டில் முதல் இடத்தில் இருந்தார். ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்த வாட்சன், தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார். 2008 முதல் 2015 வரை ராஜஸ்தான் அணியில் இடம்பிடித்த வாட்சன், பின்னர் 2016 - 17 சீசனில் ஆர்சிபி அணியில் விளையாடினார்.

இதைத்தொடர்ந்து 2018 முதல் 2020 வரை சிஎஸ்கே அணியில் இடம்பிடித்தார். இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு முறை, சிஎஸ்கே அணியில் முறை என இரண்டு முறை கோப்பை வெல்லும் அணியில் இடம்பிடித்திருந்தார்.

2019 ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணிக்கு எதிராக கடைசி வரை பேட்டிங்கில் போராடினார் வாட்சன். மூட்டு பகுதி தசை கிழிந்து ரத்து சொட்டியபோதிலும் அதை பொருப்படுத்தாமல் வாட்சன் ஆடிய ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்கள் மீது அபிமானத்தை பெற்று தந்தது.

2016ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வாட்சன் தொடர்ந்து ஐபிஎல், பிக்பேஷ், பாகிஸ்தான் பிரிமீயர் லீக், கரீபியன் பிரீமியக் லீக் உள்பட பல்வேறு டி20 லீக்களில் விளையாடினார். 2020இல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் வாட்சன்.

சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரத்துக்கும் மேல் ரன்களும், 250 ப்ளஸ் விக்கெட்டுகளும் எடுத்த வீரர்களுள் ஒருவராக இருந்து வரும் வாட்சன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.