Asian Para Games 2023: ஒரே நாளில் இந்தியாவுக்கு 6 தங்கம்! உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு
ஆண்களுக்கான கிளப் த்ரோ நிகழ்வில் மூன்று பதக்கங்களையும் இந்தியா வென்றுள்ளது. அத்துடன் ஆசிய பாரலிம்பிக் போட்டியில் ஒரே நாளில் ஆறு தங்க பதக்கங்களை இந்திய வென்றுள்ளது.

ஆசிய பாரலிம்பிக் விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அவனி லேகரா (இடது), உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற சைலேஷ் குமார் (மேல்), வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு (கீழ்)
ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவிலுள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ஒரே நாளில் 6 தங்கம் வென்று அசத்தியுள்ளது.
ஆண்களுக்கான க்ளப் த்ரோ F51 நிகழ்வில் இந்தியாவின் பிரணவ் சூர்மா தங்கம் வென்றார். 29 வயதாகும் பிரணவ் சூர்மா 30.01மீ வீசி, ஆசிய பாரா விளையாட்டு சாதனை புரிந்தார். இவருக்கு அடுத்தபடியாக 28.76மீ வீசி தரம்பிர் வெள்ளிப்பதக்கமும், 26.93மீ வீசிய அமித் குமார் வெண்கல பதக்கமும் வென்றனர். இந்தப் போட்டியில் நான்கு பேர் மட்டுமே பங்கேற்ற நிலையில், சவுதி அரேபியாவை சேர்ந்த ராதி அலி அல்ஹார்த் 23.77மீ த்ரோ செய்து நான்காவது இடத்தை பிடித்தார்.
வீல் சேரில் அமர்ந்தபடி தங்களது தோல்பட்டை, கை ஆகியவற்றின் உதவியுடன் பலத்தை வெளிப்படுத்து த்ரோ செய்யும் விதமாக இந்த போட்டி அமைந்துள்ளது.