Asian Kabaddi Championships 2023: கில்லி பட பாடலுடன் போட்டி - கொரியாவை வீழ்த்திய இந்தியா ! எங்கு பார்க்கலாம்?
ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர் 6 ஆண்டுகளுக்கு பிறகு கொரியாவில் வைத்து இன்று தொடங்கியுள்ளது. 11வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கவில்லை.
ஆசிய அணிகள் பங்கேற்கும் கபடி விளையாட்டு தொடராக ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர் உள்ளது. ஆறு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, ஈரான், தென்கொரியா, ஜப்பான், ஹாங்காங், தைவான் அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணிக்கு சுனில் குமார் கேப்டனாக உள்ளார். இந்த முறை பாகிஸ்தான் அணி பங்கேற்கவில்லை.
ஜூன் 27 முதல் ஜூன் 30 வரை நான்கு நாள்கள் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் நாளில் நான்கு போட்டிகள் நடைபெறுகின்றன. தொடரின் முதல் போட்டியில் தைவான் - ஈரான் அணிகள் மோதுகின்றன.
இதையடுத்து இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்கொரியா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 76-13 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 9 புள்ளிகள் பெறும் வரை கொரியா அணியை புள்ளி கணக்கை தொடங்கவிடவில்லை. இறுதியில் 63 புள்ளிகள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் தைவான் அணியை எதிர்கொள்கிறது.
கடைசியாக இந்த தொடர் 2017இல் நடைபெற்றது. ஈரானில் உள்ள கோர்கன் பகுதியில் நடைபெற்ற இந்த தொடரின் ஆண் மற்றும் பெண்களுக்கான கபடி தொடரில் இந்தியா அணி தங்க பதக்கம் வென்றது. தொடரை நடத்திய ஈரான் அணி இருபாலர் பிரிவிலும் வெண்கலம் வென்றது.
ஆண்கள் பிரிவில் பாகிஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் தென் கொரியா அணியும் ரன்னர் அப் ஆகினர்.
கடந்த தொடரில் இந்தியாவுக்கு அஜத்தாக்கூர் கேப்டனாக இருந்தார். ஸ்டார் வீரர் தீபக் நிவாஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். இந்த தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யவில்லை. இதன் காரணமாக ரசிகர்களால் போட்டிகளை பார்க்க முடியாமல் போனது. இந்த போட்டியை 11th Asian Men's Kabaddi Championship என்ற யூடியூப் பக்கத்தில் நேரலையாக கண்டு ரசிக்கலாம்.
இதுவரை நடைபெற்று முடிந்திருக்கும் 10 தொடர்களில் இந்திய அணி 7 முறை தங்கம் வென்று, வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்