Asian games 2023: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்! பதக்கம் ப்ளஸ் ஒலிம்பிக் தகுதி - கலக்கிய குத்துசண்டை வீராங்கனை லோவ்லினா
மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இந்தியா நட்சத்திர வீராங்கனை லோவ்லினா போர்கோஹன். அத்துடன் பாரிஸ் ஒலிம்பிக்கும் விளையாடும் தகுதியை பெற்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்
பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனையான லோவ்லினா போர்கோஹைன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனால் அவருக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. அத்துடன் இந்த வெற்றியின் மூலம் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும் விளையாடுவதற்கான தகுதி பெற்றுள்ளார்.
தாய்லாந்தின் பைசன் மணிகொண்டா என்பவருக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லோவ்லினா, 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.
முதல் சுற்றில் தடுப்பாட்டம் விளையாடிய லோவ்லினா, கடைசி நிமிடத்தில் சிறப்பான பன்ச் மூலம் பைசன் மணிகொண்டாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்தி தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தினார்.
முன்னதாக, பெண்களுக்கு 54 கிலோ எடைப்பிரிவில் சீனா வீராங்கனைக்கு எதிராக அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை ப்ரீத்தி பவார் வெண்கலம் வென்றார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க பட்டியலில் கூடுதலாக ஒரு வெண்கலம் சேர்ந்தது.
தற்போது லோவ்லினா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருப்பதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் மகளிருக்கான குத்துசண்டை போட்டியில் உறுதியாகியுள்ளது.
தற்போது வரை இந்தியா 62 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்