Asia Cup 2023: இரண்டு நாடுகளில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடர் - மொத்தம் எத்தனை போட்டிகள்?வெளியான தகவல்
2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெறும் தேதியும், இடங்களையும் அறிவித்துள்ளது ஆசிய கிரிக்கெட் கவுன்சில். இந்த முறை பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளில் 50 ஓவர் போட்டிகளாக நடைபெறவுள்ளன.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தான், இலங்கையில் நடைபெறவுள்ளன. ஹைபிரிட் மாடல்படி இருநாடுகளில் இந்த தொடர் நடத்தப்படவுள்ளன.
அதன்படி பாகிஸ்தான் நாட்டில் நான்கு போட்டிகளும், மீதமுள்ள போட்டிகள் இலங்கையிலும் நடக்கும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. போட்டி நடைபெறும் மைதானங்கள் குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபால் என 6 அணிகள் பங்கேற்கின்றன. 50 ஓவர் ஒரு நாள் போட்டிகளாக, இந்த தொடரில் மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
வரும் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கும், வீரர்களுக்கும் நல்ல பயிற்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை 2023 தொடர் 16வது தொடராக உள்ளது. இதில் பங்கேற்கும் ஆறு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், நேபால் அணிகள் ஒரு பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஒரு பிரிவிலும் இடம்பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணிகளும் முதலில் தங்களது பிரிவுகளுக்குள் இருக்கும் அணிகளுக்கு எதிராக தலா ஒரு போட்டி விளையாடி, அதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
கடந்த ஆண்டில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமிரீகத்தில் டி20 தொடராக நடைபெற்றது. இதில் இலங்கை அணி சாம்பியன் படத்தை தட்டி சென்றது. தற்போது நடப்பு சாம்பியனாக இருந்து வரும் இலங்கையில் வைத்தே இந்த முறை ஆசிய கோப்பை தொடரின் 9 போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஆசிய கோப்பை தொடர், 50 ஓவர் போட்டிகளாக 2018ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி சாம்பியனாக வாகை சூடியது. அந்த வகையில் பார்த்தால் ஆசிய கோப்பை 50 ஓவர் தொடரில் இந்திய அணி தான் நடப்பு சாம்பியனாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்